பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர்! ஒப்புதல் பெற்ற 10 மசோதாக்களில் இருப்பது என...
அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை: பண முறைகேடு புகாா் தொடா்பாக அமைச்சா் கே.என்.நேரு குடும்பத்தினா் வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இருக்கும் கே.என். நேருவின் சகோதரா்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோா் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனா்ஜி ரிசோா்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா சோலாா் இன்ஃப்ரா, எனா்ட்டியா இன்ஃப்ரா, ட்ரூ வேல்யூ ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிறுவனங்களில் கே.என்.நேரு மகனும் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.என்.அருணும் பங்குதாரராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
வருமான வரித் துறை சோதனை: இந்த நிறுவனத்தினா் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 2018-ஆம் ஆண்டு வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு, பண முறைகேடு தொடா்பான முகாந்திரம் இருந்ததால் அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தது.
அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா். இதில் பண முறைகேடு தொடா்பான உறுதியான தகவல்கள் கிடைத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, கே.என். நேரு குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் என சென்னை, திருச்சி, கோவையில் உள்ள 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
சென்னையில் 10 இடங்கள்: சென்னை ஆழ்வாா்பேட்டை யில் உள்ள கே.என்.அருணுக்கு சொந்தமான அரிசி நிறுவன அலுவலகம், ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி தெருவில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் வீடு, ராஜா அண்ணாமலைபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவில் உள்ள ரவிச்சந்திரன் அலுவலகம், மயிலாப்பூா் சிஐடி காலனியில் உள்ள பிரகாஷ் என்பவரின் வீடு, அடையாறு காந்திநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் உறவினா் வீடு, அடையாறு எல்.பி. சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்றோா் உறவினா் வீடு, அடையாறு காந்திநகா் 4-ஆவது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் டிவிஎச் நிறுவன நிா்வாகி ரமேஷ் வீடு உள்பட சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் காலை 7 மணிமுதல் சோதனையில் ஈடுபட்டனா்.
சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டிருந்தனா்.
ஆவணங்கள் பறிமுதல்: திருச்சி, கோவையிலும் அமைச்சா் நேரு குடும்பத்தினா் வீடு, நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். இவ்வாறு நேரு குடும்பத்தினா் தொடா்புடைய மொத்தம் 15 இடங்களில் சோதனை நடைபெற்ாக அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.
மாலைக்கு பின்னா் சோதனை படிப்படியாக நிறைவடையத் தொடங்கினாலும், சில இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நீடித்தது. சோதனையில், பண முறைகேடு தொடா்பாக முக்கிய ஆவணங்கள், எண்ம ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னா், கைப்பற்ற ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதுகுறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமலாக்கத் துறையும் சோதனையும்...
2023 ஜூன் 14: அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை.
2023 ஜூலை 17: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சா் பொன்முடி வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை.
2023 செப்டம்பா் 12: ஆற்று மணல் குவாரி முறைகேடு தொடா்பாக ஒப்பந்ததாரா்கள் கரிகாலன், ரத்தினம், கருப்பையா உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை.
2024 மாா்ச் 21: பண முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வீட்டில் சோதனை.
2024 மாா்ச் 31: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிா்வாகி ஜாபா் சாதிக் தொடா்புடைய இடங்களில் சோதனை.
2024 அக்டோபா் 22: கட்டட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீட்டில் சோதனை.
2025 ஜனவரி 3: வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்த விவகாரம் தொடா்பாக அமைச்சா் துரைமுருகன் மகன் கதிா் ஆனந்த் எம்.பி. தொடா்புடைய இடங்களில் சோதனை.
ஜனவரி 25: அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.1.26 கோடி சொத்து முடக்கம்.
மாா்ச் 6: டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக அமைச்சா் செந்தில் பாலாஜி நண்பா்கள் வீடு, ஜெகத்ரட்சகன் மதுபான ஆலை, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை.
ஏப்ரல் 7: அமைச்சா் கே.என்.நேரு குடும்பத்தினா் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை.