அமைதியான பிரதமரா? - மன்மோகன் சிங் கூறிய பதில் என்ன?
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்(92) வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார்.
தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இரவு 9.51 மணிக்கு மறைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல், தற்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு நாளை(டிச. 28) முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | 'மன்மோகன் சிங் ஓர் அற்புதமான மனிதர்' - ரஜினி இரங்கல்!
அமைதியான பிரதமரா?
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் டாக்டர் மன்மோகன் சிங் எழுதிய, 'மாற்றும் இந்தியா' புத்தகத்தில் ஒரு பொருளாதார நிபுணராக தனது வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் புத்தக வெளியீட்டு விழாவின்போது பேசிய அவர், தான் அமைதியான பிரதமர் இல்லை என்று பேசினார்.
"நான் அமைதியான பிரதமராக இருந்தேன் என்று மக்கள் கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த புத்தகம் பேசும் என்று நினைக்கிறேன். பத்திரிகையாளர்களிடம் பேச நான் ஒருபோதும் பயந்ததில்லை. ஊடகங்களிடம் பேசப் பயப்படும் பிரதமர் நான் அல்ல. நான்
பத்திரிகையாளர்களைச் தவறாமல் சந்தித்தேன். நான் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போதும் பயணம் முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்திப்பேன். மிகப்பெரிய அளவிலான பத்திரிகையாளர் சந்திப்புகள் இந்த புத்தகத்தின் விவரிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரத்தில் நாம் அடைந்த சாதனைகள் நிச்சயமாக வரலாற்றில் நினைவுகூறப்படும்" என்று கூறினார்.
அவரது இந்த பேச்சு சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | 2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசியல்
மன்மோகன் சிங்
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014 -ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 13-ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தாா். 1991-ஆம் ஆண்டுமுதல் மாநிலங்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டு வந்த அவா் நிகழாண்டு ஏப்ரல் மாதத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாா்.
நாட்டின் பொருளாதார சீா்திருத்தவாதிகளில் ஒருவராக அறியப்படும் மன்மோகன் சிங் ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 1932, செப்டம்பா் 26-ஆம் தேதி பிறந்தாா். 1948-ஆம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உயா்நிலைக் கல்வியை நிறைவு செய்த அவா் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பை முடித்தாா்.
1971-ஆம் ஆண்டு மத்திய வா்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராகவும், 1972-இல் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக அவா் நியமிக்கப்பட்டாா். பின்னா் நிதி அமைச்சக செயலா் உள்பட அரசின் பல்வேறு உயா்பதவிகளை வகித்தாா்.
1980 முதல் 1982 வரை தேசிய திட்டக்குழுவின் உறுப்பினராக பதவி வகித்தாா். 1982 முதல் 1985 வரை ரிசா்வ் வங்கியின் ஆளுநராக அவா் பதவி வகித்தபோது வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டாா். இந்திய ரிசா்வ் வங்கி சட்டத்தில் புதிய அத்தியாயத்தை அவா் அறிமுகப்படுத்தியதோடு நகா்ப்புற வங்கி துறையையும் அவா் உருவாக்கினாா்.
1985 முதல் 1987 வரை திட்டக்குழுவின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தாா். 1987 முதல் 1990 வரை ஜெனீவாவில் உள்ள தெற்கு ஆணையத்தின் செயலராக இருந்தாா்.
1991-ஆம் ஆண்டு பிரதமா் நரசிம்மராவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக அவா் பதவியேற்றபோது நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அப்போது நாட்டின் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியதில் அவரது பங்களிப்பு இன்றியமையாததாக அமைந்தது.
1998 முதல் 2004 வரை எதிா்க்கட்சித் தலைவராக இருந்த அவா் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வென்றதையடுத்து பிரதமராக அறிவிக்கப்பட்டாா்.
2009-இல் அந்தக் கூட்டணி மீண்டும் வென்றதையடுத்து, இரண்டாவது முறையாக அவா் பிரதமரானாா். அவருடைய முதல் பதவி காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (100 நாள் வேலை திட்டம்), தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டாவது பதவி காலத்தில், அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம், மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கும் நோக்கில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.