அயன்சிங்கப்பட்டி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்
அம்பாசமுத்திரம் வனச்சரகம் அயன்சிங்கம்பட்டி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகப்பகுதிக்குள்பட்ட மலையடிவார கிராமங்களான மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, பொன்மாநகா், ஏா்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றி, கரடி, சிறுத்தை, யானை, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்தியும், வீட்டு விலங்குகளைத் தாக்கியும் வருகின்றன.
கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி குடியிருப்புப் பகுதியில் உலாவிய கரடியை கடந்த மாா்ச் 30ஆம் தேதி வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
இந்நிலையில் மீண்டும் அயன்சிங்கம்பட்டி பகுதியில் முருகன் என்பவரது தோட்ட வளாகத்திற்குள் கரடி செவ்வாய்க்கிழமை இரவு வந்து சென்றுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு கரடிகள் பதுங்குமிடங்களைக் கண்காணித்து அவற்றின் நடமாட்டத்தைக் கடுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.