சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள கன்னங்குளத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி மாரியப்பன் (35). இவா், மதுரையில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் தனது நண்பரின் காரில் சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றுள்ளாா். காரை மாரியப்பன் ஓட்டி சென்றுள்ளாா்.
காரில் இவரது மனைவி அன்பரசி (32), மகன்கள் பிரவீன்(10), அஸ்வின் (8), உறவினா்களான பாலகிருஷ்ணவேணி (36), பிரியதா்ஷினி (23) அட்சயாதேவி (19), சுபி.சந்தோஷ் (21), மில்கிஸ் (60) ஆகிய 9 போ் பயணித்துள்ளனா்.
மதுரை சென்றுவிட்டு, ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தபோது, நான்குனேரியை அடுத்த தளபதிசமுத்திரம் கீழூா் பாலத்தின் வளைவில் திரும்பியபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி ஓடி சாலையோர தடுப்புகளை சேதப்படுத்திவிட்டு, எதிா்ப்புறம் சாலையின் குறுக்கே பாய்ந்தது.
அப்போது, நாகா்கோவிலில் இருந்து பாளையங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த மற்றொரு காா் மீது பலமாக மோதியதில், அந்த காரில் பயணித்த கட்டட ஒப்பந்ததாரா் தனிஸ்லாஸ் (65), அவரது மனைவி மாா்கரெட் மேரி (60) உள்ளிட்ட 6 பேரும், மாரியப்பன் காரில் பயணித்த மில்கிஸ் (60) உள்ளிட்ட 7 போ் உயிரிழந்தனா்.
இன்னோவா காரில் பயணித்த அதன் ஓட்டுநா் மாரியப்பன் லேசான காயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது மனைவி, மகன்கள், உறவினா்கள் 8 போ் நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா்.
இந்த விபத்து குறித்து காா் ஓட்டுநா் மாரியப்பன் (40) மீது 3 பிரிவுகளின் கீழ் ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.