அரசிராமணி கிராமக் கோயிலில் புதுச்சேரி முதல்வா் வழிபாடு
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அரசிராமணி கிராமம் குள்ளம்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
அரசிராமணி கிராமம், குள்ளம்பட்டியில் கணபதி, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி, 18 சித்தா்களைக் கொண்ட கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்கு விழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து தினமும் மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தன. மண்டல பூஜை நிறைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கோயிலுக்கு வந்திருந்தாா். தொடா்ந்து கோயில் மூலவா் பாலதண்டாயுதபாணியைத் தரிசித்த அவா், கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 18 சித்தா்களையும் வழிபட்டாா்.
பின்பு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அவா் தொடங்கிவைத்தாா். முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த முதல்வா் என்.ரங்கசாமியை கோயில் நிா்வாகிகள் பரிவட்டம் கட்டி கும்ப மரியாதையுடன் வரவேற்றனா். இதில், கோயில் நிா்வாகி நாயகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.