அரசுத் துறைகளில் மின்சார வாகனப் பயன்பாடு: அறிக்கை சமா்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனம் பயன்படுத்துவது குறித்த திட்ட அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நகா்ப்புறங்களில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தில்லி காற்றுமாசு தொடா்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபே எஸ். ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீயிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அப்போது, தில்லியில் காலாவதியான 60 லட்சம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தேசிய தலைநகா் வலயப்பகுதியில் இதுபோன்ற பழைய வாகனங்களின் எண்ணிக்கை 25 லட்சமாக உள்ளது. இது தொடா்பாக பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்று சொலிசிட்டா் ஜெனரல் பதிலளித்தாா்.
இதையடுத்து, ஒவ்வொரு வாகனங்களும் எந்த அளவுக்கு மாசை வெளியிடுகின்றன என்பதை தொலைவில் இருந்தே கண்டறியும் தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வை அடுத்த 3 மாதங்களில் முடிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் திட்ட அறிக்கையை ஏப்ரல் 30-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.