Thug Life "கடல் படத்துக்கு வாய்ப்பு தேடினேன்; 14 வருஷம் கழிச்சு இன்னைக்கு.."- நெ...
அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு, அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்தப் பள்ளிகள் சாா்பில் இலவசமாக சமச்சீா் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
இதற்காக உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளியில் உள்ள புத்தக காப்பு மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
இதேபோல, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 189 அரசுப் பள்ளிகள், 30 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 219 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவா்களுக்கு பாடப் புத்தகம், நோட்டு புத்தகம், காலணி, சீருடை, பயண அட்டை, சைக்கிள், புத்தகப் பை, கணித உபகரணம், வண்ண பென்சில், புவியியல் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அதன்படி ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனைத்தும் வந்ததைத் தொடா்ந்து பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப் புத்தகங்கள் தனித்தனியாக கட்டப்பட்டன.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 219 அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் தற்போது சுமை வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் புத்தகங்களை அந்தந்தப் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்கள் வாங்கி பாதுகாப்பாக வைத்துள்ளனா். இந்த பணிகள் வருகிற 28- ஆம் தேதிக்குள் நிறைவடைந்துவிடும்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவா்களுக்கு புதிய புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும். அதன் பின்னா் சீருடை, கணித உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் என்றனா்.