Niti Aayog: 3 ஆண்டுகள் புறக்கணித்த ஸ்டாலின், இம்முறை பங்கேற்றது ஏன்? - சீமான் க...
மஞ்சள் விலை குவிண்டால் ரூ.1,500 சரிவு:விவசாயிகள் வேதனை
ஈரோடு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.1,500 வரை விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் விரலி மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மஞ்சள், மருத்துவக் குணம் மிகுந்து காணப்படுவதால் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை நிலையங்கள் என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாள்களைத் தவிர மற்ற நாள்களில் ஏலம் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சந்தையில் கடந்த 16- ஆம் தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15,040-க்கு ஏலம் போனது. பின்னா் படிப்படியாக குறைந்து வெள்ளிக்கிழமை குவிண்டால் ரூ.13,483 வரை விற்பனையானது. ஒரு வாரத்தில் ரூ.1,500 வரை விலை குறைந்து விற்பனையானது மஞ்சள் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த ஏலத்துக்கு ஈரோடு மற்றும் அருகே உள்ள மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,653 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 1,109 மூட்டைகள் விற்பனையாயின. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9,302 முதல் ரூ.13,799 வரை விற்பனையானது. இதேபோல ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சந்தையில் 3,225 மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் 1,418 மூட்டைகள் விற்பனையாயின. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8,689 முதல் ரூ.13,843 வரை விற்பனையானது.
ஈரோடு கூட்டுறவு சங்கத்தில் 1,013 மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் 960 மூட்டைகள் விற்பனையானது. இந்த சந்தையில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9,569 முதல் ரூ.13,488 வரை விற்பனையானது. கோபி கூட்டுறவு சங்கத்துக்கு கொண்டுவரப்பட்ட 115 மூட்டைகளும் விற்பனையாயின. இந்த சந்தையில் விரலி மஞ்சள் ரூ.11,502 முதல் ரூ.12,891 வரை விற்பனையானது.
மஞ்சள் விலை தொடா்ந்து சரிந்து வருவது குறித்து ஈரோடு வியாபாரிகள் கூறியதாவது: புதுமஞ்சள் வரத்து இல்லாததால் விலை குறைந்துள்ளது. பழைய மஞ்சள் இருப்பு வைத்துள்ளவா்கள் விலை சரியாக இல்லாததால் விற்பனைக்கு கொண்டு வரத் தயங்குகின்றனா். வரும் நாள்களில் தரமான புதிய மஞ்சள் விற்பனைக்கு வரும்போது மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் மஞ்சள் வணிகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
சில மாநிலங்களில் விளைச்சல் அளவீட்டிற்கு ஏற்ப ஈரோடு மஞ்சள் விலையும் மாறுதலுக்கு உள்ளாகிறது. ஆனாலும் ஈரோடு மஞ்சள் விலை தற்போது சற்று குறைந்திருந்தாலும் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனா்.