இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
கடந்த ஏப். 23ல் ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டது.
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளை இந்திய ராணுவமும் வடக்கு காஷ்மீரில் உள்ள உரி முதல் ஜம்முவில் உள்ள பூஞ்ச், ரஜோரி வரை பாகிஸ்தான் ராணுவமும் கடுமையான தாக்குதல் நடத்தியது. பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று(மே 23) இரவு குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்திய எல்லை பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.
இதுதொடர்பாக எல்லை பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்திய - பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி ஒருவர், இந்திய எல்லைக்குள் நுழைய வேலியைத் தாண்டி வந்தார். அவரை எல்லை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியும் அவர் முன்னேறி இந்திய எல்லைக்குள் ,நுழைய முயன்றதால் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கையாக, எல்லையில் சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்கள் ஊடுருவ முயன்றால் துப்பாக்கியால் சுட அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!