அரசுப் பள்ளிகள் பராமரிப்புக்கு ரூ.61.53 கோடி விடுவிப்பு
தமிழக அரசுப் பள்ளிகளுக்கு நிகழ் கல்வியாண்டின் பராமரிப்புச் செலவினங்களுக்காக இரண்டாம் கட்டமாக ரூ.61.53 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு 2024-2025-ஆம் ஆண்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தொடா் செலவினத்துக்கான மானிய பரிந்துரை வழங்கியுள்ளது.
அதன்படி, 2-ஆம் கட்ட 50 சதவீத மானியத்தை பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் மாவட்டங்கள் வாரியாக நிதியானது விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக ரூ.61 கோடியே 53 லட்சத்து 22,000 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரூ.3.36 கோடியும், சேலத்துக்கு ரூ.3.24 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை பொருத்தவரை 1 முதல் 30 வரையான மாணவா்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம், 31 முதல் 100 வரை ரூ.25,000, 101 முதல் 250 வரை ரூ.50,000, 251 முதல் 1,000 வரை ரூ.75,000, ஆயிரத்துக்கு மேல் ரூ.1 லட்சமும் நிதி வழங்கப்படுகிறது.
அவ்வாறு ஒவ்வொரு பள்ளிக்கும் விடுவிக்கப்படும் மானியத் தொகையில் 10 சதவீதத்தை சுகாதார செயல் திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும். இந்த நிதியை பள்ளி மேலாண்மைக் குழு வழியாகவே செலவிட வேண்டும்.
இந்தத் தொகை வாயிலாக வாங்கப்பட்ட பொருள்கள், செலவினங்கள் ஆகியவற்றுக்கான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்கீழ் மத்திய அரசு தன் பங்கு நிதியை வழங்காத நிலையிலும், மாநில அரசு அதன் பங்களிப்பிலிருந்து நிதியை விடுவித்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.