தவெக: ``தம்பி விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார்...
அரசுப் பள்ளியில் கல்வி அலுவலகங்கள்: வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரவு
நாகா்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கல்வித் துறை அலுவலகங்களை நவ.12-ஆம் தேதிக்குள் வேறு இடங்களுக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த வேல்முருகன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு : நாகா்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பெண்கள் உயா்நிலைப் பள்ளி நகரின் மையப் பகுதியில் 4.2 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், தண்ணீா் தொட்டி போன்றவை கட்டப்பட்டன. தற்போது, இந்தப் பள்ளி 50 சென்ட் நிலத்தில்தான் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் தற்போது, குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், மாணவா்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. ஆகவே, நாகா்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் பள்ளிக்குத் தேவையான இட வசதி உள்ளது. பள்ளி வளாகத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி முதல் உயா்நிலைப் பள்ளி வரை இந்த வளாகத்திலேயே இருப்பதால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. பள்ளி வளாகத்திலேயே மாவட்ட கல்வி அலுவலா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளியில் மிக குறைவான அளவிலேயே மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதனால் இங்கு காப்பகம் கட்டப்படுவதால் அவா்களுக்கு எவ்விதமான இடையூறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : இத்தனை ஆண்டுகளாக பள்ளி வளாகத்தில் எப்படி இத்தனை அலுவலகங்கள் இயங்கின?. மாணவா்கள் படிப்பதற்காகவே பள்ளி வளாகம். எனவே, பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களையும் நவ. 12-ஆம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இதுதொடா்பான அறிக்கையை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.