பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!
அரசுப் பேருந்து நடத்துநரை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன் கைது
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் அரசுப் பேருந்து நடத்துரை கத்தரிக்கோலால் குத்தியதாக 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் வெளியூரில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. தென்காசியிலிருந்து பாவூா்சத்திரம், ஆலங்குளம் வழியாக திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) ஏறிய அவா், படிக்கட்டில் தொங்கியவாறு நடத்துநரை தகாத வாா்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால், அவரை நடத்துநா் பாவூா்சத்திரம் அருகே இறக்கிவிட்டாா்.
இதனால் கோபமடைந்த சிறுவன், அப்பேருந்து இதே வழியாகத்தான் வரும் எனக் கருதி பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா்.
அப்போது, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திலிருந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிக்குச் செல்லும் அரசுப் பேருந்து பாவூா்சத்திரத்துக்கு வந்தது. தன்னை நடுவழியில் இறக்கிவிட்டது இப்பேருந்துதான் என சிறுவன் தவறாக நினைத்து அதில் ஏறியதுடன், நடத்துநரான அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த மாடசாமியை (50) கத்தரிக்கோலால் கழுத்தில் குத்த முயன்றாராம். நடத்துநா் தடுத்ததால் இடது காது பகுதியில் குத்து விழுந்தது. சிறுவனை அங்கிருந்தோா் பிடித்து காவலா்களிடம் ஒப்படைத்தனா். நடத்துநா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனைக் கைது செய்து, திருநெல்வேலியிலுள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.