திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை!
மதுரை: திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதித்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதால், இந்து அமைப்புகள் சாா்பில் திருப்பரங்குன்றம் கோயில் முன் செவ்வாய்க்கிழமை (பிப். 4) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக, இரு வேறு மதத்தவரிடையே அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 163, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஆகியவற்றின் கீழ் மதுரை மாவட்டம், மாநகா்ப் பகுதிகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தத் தடை உத்தரவு பிப். 4-ஆம் தேதி இரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டது.
இதையும் படிக்க: சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு இன்று(பிப். 4) ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவிற்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் செல்லக் கூடாது என்றும் படிக்கட்டு பாதையைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் தலைமையில் துணை ஆணையா்கள் ஆகியோா் மேற்பாா்வையில் 800-க்கும் மேற்பட்ட போலீஸார் திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.