காவல்துறையினர் மிரட்டிப் பணம் பறித்ததாக இளைஞர் தற்கொலை!
பென்னாகரம்: காவல்துறையினர் மிரட்டிப் பணம் பறித்ததாக இளைஞர் தற்கொலை கொண்ட நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இளைஞர் ஒருவரிடம் பென்னாகரம் அருகே காவல்துறையினர், தனியார் விடுதி நிர்வாகிகள் மிரட்டிப் பணம் பறித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், மன உளைச்சல் ஏற்பட்ட அந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் அருகே பிலியனூர் பகுதியைச் சேர்ந்த ரைஸ் மில் உரிமையாளர் முனியப்பன் மகன் புகழேந்தி (28).
இவர்,கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தருமபுரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். விடுதியில் உள்ள அறையில் ரகசிய கேமராவில் இருவரும் தங்கியது பதிவானக் காட்சியை வைத்துக்கொண்டு விடுதியின் நிர்வாகிகள் புகழேந்தியை மிரட்டி பணம் பறித்து வந்ததாகத் தெரிகிறது. இதனை அடுத்து புகழேந்தி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், விடுதி நிர்வாகிகளிடமிருந்த காட்சிப்பதிவை பெற்றுக்கொண்டு புகழேந்தியை மிரட்டி கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
புகழேந்தி தனது நண்பர் ஒருவர் உதவியுடன் காவல்துறையினர்,விடுதி நிர்வாகிகள் மிரட்டலின் பேரில் அடிக்கடி கடன் வாங்கி பணம் கொடுத்து வந்ததாகவும், வீட்டில் இருந்த நகைகளை தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து பணம் கொடுக்கும்போது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
குடும்பத்தினர் புகழேந்தியிடம் கேட்டபோது, தன்னை மிரட்டி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர், தருமபுரி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் நிர்வாகிகள் அடிக்கடி பணம் படித்து வந்ததாகவும் இதுவரையில் சுமார் ரூ.12 லட்சம் வரை கொடுத்துள்ளதாக உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனக்கு சொந்தமான ரைஸ் மில்லில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிக்க: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! இன்றும் புதிய உச்சம்!!
இதனை அறிந்து அப்பகுதியினர் அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே புகழேந்தி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இளைஞரிடம் பணம் பறித்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தங்கும் விடுதி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உடலை வாங்க மறுத்து பென்னாகரம் அம்பேத்கர் சிலை முன்பு சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரி வாகனங்கள் பேருந்துகள் சாலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் காவல்துறை கண்காணிப்பாளர் மகாலட்சுமி ,காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் மற்றும் காவலர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், இது குறித்த முறையான புகார் அளிக்குமாறும் புகாரின் அடிப்படையில் விசாரணை தூரிதமாக மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].