அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா போராட்டம்
திருவாரூா்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திருவாரூரில் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலா்கள், ஊா்புற நூலகா்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் என சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், காலை உணவுத் திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியா்களை கொண்டே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த தா்னா போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் சு. சுதாகா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை, தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் குரு. சந்திரசேகரன் தொடங்கிவைத்தாா். மாவட்டச் செயலாளா் எஸ். செங்குட்டுவன், அமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலாளா் வெ. சோமசுந்தரம் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா். இதில், அரசு ஊழியா் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளா் மு. சௌந்தரராஜன், சிஐடியு மாவட்டத் தலைவா் அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.