இதைச் செய்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி: விஜய பிரபாகரன் வைத்த செக்!
லஞ்சம்: காவல் ஆய்வாளா் உள்பட 5 காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்
திருவாரூா்: திருவாரூரில் டீசல் திருட்டில் ஈடுபட்டவா்களிடம் பணம் பெற்றதாக எழுந்த புகாா் தொடா்பாக காவல் ஆய்வாளா் உள்பட 5 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டனா்.
திருவாரூா் பழைய தஞ்சை சாலையில் லாரி செட் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான லாரிகளிலிருந்து தொடா்ந்து டீசல் திருட்டு போவதாக, அந்த நிறுவனத்தின் மேலாளா் அசோக்குமாா் திருவாரூா் நகர காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா்.
திருவாரூா் உட்கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அடியக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்த அப்துல் மஜீத் (34), பஜ்ருல் ஷேக் (30) ஆகியோரை கைது செய்தனா்.
இதனிடையே, பழைய தஞ்சை சாலை லாரி செட் யூனியன் சாா்பில், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், டீசல் திருட்டில் தொடா்புடைய முக்கிய நபா்களிடம் போலீஸாா் ரூ. 3 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனா். எனவே இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் திருவாரூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ராஜு, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பூபதி, அருள், தலைமைக் காவலா்கள் ஜானி, மணிகண்டன் ஆகிய 5 பேரை காத்திருப்போா் பட்டியலுக்கு திங்கள்கிழமை மாற்றி உத்தரவிட்டுள்ளாா்.