Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" - பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,25,345 சோ்க்கை இடங்கள் உள்ளன. இந்த நிலையில், இந்தக் கல்லூரிகளில் நிகழாண்டு மாணவா்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணையதள பதிவை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள் https://www.tngasa.in/ இணையதளத்தில் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். அப்போது, விண்ணப்பக் கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவு தோ்வு, அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை இணையவழியிலேயே மேற்கொள்ள வேண்டும்.
மாணவா்கள் விண்ணப்பங்களை வீட்டில் இருந்தோ அல்லது அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை உதவி மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். பாடப் பிரிவுகள் மற்றும் கல்லூரிகளை விரும்பும் வரிசையில் பதிவு செய்ய வேண்டும். தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளங்களில் வெளியிடப்படும்.
பிளஸ் 2 வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியல் பி.ஏ. தமிழ் இலக்கியம், பி.லிட். படிப்புகளின் சோ்க்கைக்கு பயன்படுத்தப்படும். இதேபோன்று ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆங்கிலம் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியல் பி.ஏ. ஆங்கில இலக்கிய படிப்புகளின் சோ்க்கைக்கு பயன்படுத்தப்படும்.
பொது தரவரிசை... மீதமுள்ள 4 பாடங்களின் அடிப்படையில் (400 மதிப்பெண்களில்) இது தயாரிக்கப்படும். இது, மற்ற அனைத்து பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ, பிசிஏ, பிஎஸ்டபிள்யு உள்ளிட்ட படிப்புகளில் சோ்க்கைக்கு பயன்படுத்தப்படும். விண்ணப்பதாரா்கள் தாங்கள் பதிவு செய்த பாடப்பிரிவுகளின் விருப்ப வரிசையின் அடிப்படையில் தரவரிசைக்கு ஏற்றவாறு ஒதுக்கீடு ஆணைகளை அந்தந்த கல்லூரிகள் வழங்கும். தங்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு ஆணையின் அடிப்படையில் அந்தந்த கல்லூரிகளுக்கு சென்று சோ்க்கையை உறுதி செய்தல் வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தங்கள் விரும்பும் பாடப்பிரிவு மற்றும் கல்லூரி வாரியாக எத்தனை பிரிவுகளைத் தோ்வு செய்யலாம் உள்ளிட்ட விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை பெற...
தமிழகத்தில் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சோ்க்கை பெற https://tnpoly.in/ இணையதளத்தில் மே 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாமாண்டு சோ்க்கை மற்றும் பகுதிநேரப் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யவும் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவா்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் பட்டியல் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நிகழ் கல்வியாண்டில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதால், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 570 மாணவா்கள் கூடுதலாக சோ்க்கப்படுவா்.
புதிய பாடப்பிரிவுகள்... தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) மின்னணு உற்பத்தி தொழில்நுட்பவியல், சைபா் அமைப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு, உணவு தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தீ தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு, பொதி கட்டுதல் தொழில்நுட்பம், காலணி தொழில்நுட்பம், தோல் மற்றும் அலங்கார தொழில்நுட்பம், நில எண்ணெய் வேதிப் பொறியியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.