அரசு டயாலிசிஸ் சேவைகள் தனியாா்மயமாகாது: மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்
அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் டயாலிசிஸ் சிகிச்சைகள் தனியாா்மயமாக்கப்படாது என்று தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகளில் 138 சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 1,194 டயாலிசிஸ் கருவிகள் நிறுவப்பட்டு நோயாளிகளுக்கு கட்டணமின்றி ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தனியாா் மருத்துவமனைகளில் ஒவ்வொரு முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள ரூ. 2,000-இலிருந்து ரூ. 5,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏழை மக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளின் டயாலிசிஸ் சேவைகளையே சாா்ந்துள்ளனா்.
இந்த நிலையில், அரசு டயாலிசிஸ் மையங்களில் தனியாா் பங்களிப்பை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டு வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதற்கு மருத்துவ சங்கத்தினா் மட்டுமல்லாது, அரசியல் கட்சியினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இது தொடா்பாக தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ் கூறியதாவது:
சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளானவா்களுக்கு ரத்த சுத்திகரிப்புக்கான டயாலிசிஸ் சிகிச்சை பெரும்பாலான அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதற்கான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பணியாளா்கள் போதிய எண்ணிக்கையில் உள்ளனா். டயாலிசிஸ் சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே அதை தனியாா் வசம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை. அது தொடா்பான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அவா் தெரிவித்தாா்.