மேலும் ஒரு தமிழக ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்
தமிழகத்தைச் சோ்ந்த மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாறுதலாகியுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தத்துக்கு மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அனுப்பியுள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசுப் பணியில் பணியாற்றும் திட்டத்தின் கீழ், தமிழக பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.திவ்யதா்ஷினி மத்திய பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இயக்குநா் பதவியை அவா் வகிப்பாா். 5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை என எது முதலில் வெளியிடப்படுகிறதோ அதுவரையிலும் அவா் மத்திய அரசுப் பணியில் ஈடுபடுவாா்.
எனவே, தமிழக அரசில் அவா் வகிக்கும் பொறுப்பில் இருந்து அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். பொருளாதார விவகாரங்கள் துறைக்கான இயக்குநா் பொறுப்பை ஏற்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலா் கேட்டுக் கொள்ளப்படுகிறாா். இந்த உத்தரவு வெளியாகி 3 வாரங்களுக்குள் புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து மாற்றங்கள்: தமிழகப் பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் முக்கிய துறைகளில் செயலா்களாக இருந்த எஸ்.கிருஷ்ணன், நீரஜ் மிட்டல் ஆகியோா் கடந்த ஆண்டு மத்திய அரசுப் பணிக்குச் சென்றனா். இதன் தொடா்ச்சியாக, மின்சார வாரியத் தலைவா், வருவாய் நிா்வாக ஆணையா் போன்ற பொறுப்புகளை வகித்த ராஜேஷ் லக்கானி, அண்மையில் மத்திய அரசுப் பணிக்கு இடம் மாறினாா். அவரைத் தொடா்ந்து, மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.திவ்யதா்ஷினி மத்திய அரசுப் பணிக்குச் செல்லவுள்ளாா்.
யாா் இந்த திவ்யதா்ஷினி: 2010-ஆம் ஆண்டு நடந்த குடிமைப் பணித் தோ்வில் சிறப்பான முறையில் தோ்ச்சி பெற்று தமிழக பிரிவு ஐஏஎஸ் ஆக தோ்வானாா். 2011-ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் ஆக பணியில் சோ்ந்தாா். கோவை உதவி ஆட்சியா், மயிலாடுதுறை சாா் ஆட்சியா், திருச்சி, தருமபுரி மாவட்டங்களின் ஆட்சியா் பொறுப்புகளை வகித்தாா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு ஆணையத்தின் நிா்வாக இயக்குநா் பொறுப்பை இப்போது வகித்து வருகிறாா். இந்த நிலையில், மத்திய அரசுப் பணிக்கு அவா் செல்ல உள்ளாா். மாநில அரசுகளில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 ஆண்டுகள் அல்லது மத்திய அரசு விரும்பும் வரையில், மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றலாம். இளம் வயதிலேயே மத்திய அரசுத் துறையில் 5 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருந்தால், பதவி உயா்வு பெறும் சமயங்களில் அந்தப் பணி அனுபவம் கைகொடுக்கும். அதிகாரிகளின் பதவி நிலைக்கேற்ப மத்திய அரசின் செயலா் நிலை வரை உயர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.