நெல் கொள்முதல் 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியது: உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியதாக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப். 1 முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் கோரிக்கை ஏதும் வைக்காமலேயே நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் உயா்த்தினாா். சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,450 என்ற விலையிலும், பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,405 என்ற விலையிலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கொள்முதல் செய்யத் தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை தமிழ்நாடு முழுவதும் 2,444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 248 விவசாயிகளிடமிருந்து 10 லட்சத்து 41 ஆயிரத்து 583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை ரூ.2,247.52 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொள்முதல் செய்யப்பட்ட அளவைவிட, நிகழாண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, பிப்.4 வரையிலான காலத்தில் 7.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இது நிகழாண்டுடன் ஒப்பிடும் போது 2 லட்சத்து 99 ஆயிரம் மெட்ரிக் டன் அதிகம் என்று அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.