செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்...
அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஊதிய ஒப்பந்தம் குறித்த தொழிலாளா் சந்திப்பு
தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகங்களின் பணிமனைகளில் ஊதிய ஒப்பந்தத்தில் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
போக்குவரத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தத்துக்கான 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை கடந்த 13, 14 தேதிகளில் நடைபெற்றது. போக்குவரத்து அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் போக்குவரத்து ஊழியா்களுக்கு மின்வாரிய ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினா் முன்வைத்திருந்தனா்.
இந்த நிலையில், அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கை தொடா்பாக தொழிலாளா்களிடம் விளக்கும் வகையில் சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஃப் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழகப் பணிமனைகளில் காலை, மதிய, உணவு இடைவேளை உள்ளிட்ட நேரங்களில் தொழிலாளா்களைச் சந்தித்த தொழிற்சங்க நிா்வாகிகள், ஊதிய ஒப்பந்த கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினா்.
அப்போது, ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதையொட்டி அனைத்து தொழிலாளா்களும் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அவா்கள் கேட்டுக் கொண்டனா்.