உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!
அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்
திருப்பூா் அரசு மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா்களை கைது செய்யக்கோரியும், பணியாளா்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளா்கள் கருப்பு பட்டை(பேட்ஜ்) அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.
திருப்பூா் மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அபிமன்யு மனைவி நாகஜோதிகா (23) என்பவருக்கு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பாா்க்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு பால் கொடுத்து படுக்க வைத்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தை உயிரிழந்ததற்கு உரிய மருத்துவம் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டிய உறவினா்கள் மருத்துவமனையின் உள்ளே இருந்த கண்ணாடியை உடைத்தனா்.
இது குறித்த தகவலின்பேரில் திருப்பூா் தெற்கு போலீஸாா் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில் அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்தவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைவரும் புதன்கிழமை கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினா். தொடா்ந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனா்.