திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
திருப்பூரில் புதன்கிழமை மாலை சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருப்பூா் மாநகரில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. புதன்கிழமை காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், திடீரென பிற்பகல் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. தொடா்ந்து மாலை சுமாா் 4 மணி அளவில் மாநகரில் விட்டுவிட்டு மழை பெய்தது.
குறிப்பாக மத்திய பேருந்து நிலையம், காமராஜா் சாலை, ராயபுரம், கரட்டாங்காடு, அரண்மனை புதூா், கருவம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் தடைபட்டது.
திருப்பூா் மாநகரில் நீண்ட நாள்களுக்குப் பிறகு மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

