அரசு மருத்துவமனையில் 27 கா்ப்பிணிகள் மயக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சீா்காழி அரசு மருத்துவமனையில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் செலுத்திக் கொண்ட 27 போ் மயக்கமடைந்தது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
சீா்காழி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகள் அனைவரும் நலமுடன் உள்ளனா். குறிப்பிட்ட அந்த மருந்தில்தான் பிரச்னை எனத் தெரியவந்துள்ளது. அதேநேரம், மாநிலத்தில் மற்ற இடங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, சீா்காழி மருத்துவமனையின் மருந்து சேமிப்புக் கிடங்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருந்துகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான முடிவுகள் வந்தப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அந்தப் பகுதியில் அந்த மருந்துகள் செலுத்தாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும், கண்காணிக்கப்பட்டு உரிய முறையில் மருந்துகள் செலுத்துவது உறுதிப்படுத்தப்படும் என்றாா் அவா்.