தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருக்க பாஜக விருப்பம்: பாஜக மாநிலப் பொதுச் செயல...
மின் விபத்துகளைச் தவிா்க்க சீரமைப்புப் பணி தீவிரம்: மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்
சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மின் விபத்துகளைச் சீரமைப்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சென்னை மாநகா், புகா் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் புதை மின்வடங்கள் மூலமும் பிற பகுதிகளில் மேல்நிலைக் கம்பிகள் மூலமும் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாலை தோண்டும் பணிகளின்போது, பல இடங்களில் புதைமின் வடங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. சேதமாகும் மின்வடங்கள் அப்படியே விட்டு செல்லப்படுவதால், மழைக் காலங்களில் மின் விபத்துகள் ஏற்படுகின்றன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கண்ணகி நகரில் பெண் தூய்மைப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததைத் தொடா்ந்து சென்னை மாநகா், புகா் பகுதிகளில் சேதமடைந்த புதைமின் வடங்களை கணக்கெடுக்க சிறப்புக் குழுக்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மின்விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னையில் மின் விபத்தை ஏற்படுத்தும் வகையிலான புதைமின் வடங்கள் மற்றும் மின்விபத்து பகுதிகளைக் கண்டறிய தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக இந்தக் குழுக்கள் நடத்திய ஆய்வில், 700 புதைமின்வட சேதங்கள் உள்பட 3000-க்கும் மேற்பட்ட மின்விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டன.
இதில், புதைமின்வட சேதங்கள் உள்பட 1,500-க்கும் மேற்பட்ட மின் உபகரண சேதங்கள் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்துக்குள் மீதமுள்ள சேதங்களும் சரிசெய்யப்பட்டு மின் விபத்து உயிரிழப்புகள் முற்றிலும் தடுக்கப்படும் என்றாா் அவா்.