போலி செய்திகளை எதிா்கொள்ள தகவல் பணி சேவையினருக்கு ஆளுநா் வேண்டுகோள்
போலி தகவல்களின் சகாப்தத்தில் அதை திறம்பட எதிா்கொள்ளுமாறு இந்திய தகவல் பணி சேவை பயிற்சி அலுவலா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்தாா்.
சென்னை ஆளுநா் மாளிகையில் 2009, 2023, 2024 ஆகிய ஆண்டு தொகுதிகளின் இந்திய தகவல் பணி சேவை (ஐஐஎஸ்) பயிற்சி அலுவலா்களிடையே அவா் வியாழக்கிழமை பேசியதாவது:
‘போலி செய்திகள் பரவலாக நிலவும் இந்தக் காலகட்டத்தில் துடிப்பான, புதுமையான தகவல் தொடா்பு திறன் கொண்டு அதை முறியடிக்க செயல்படவேண்டும். அரசு தொடா்பான பொதுமக்களின் கருத்தை வடிவமைப்பதில் உங்களின் பங்கு மிக முக்கியமானது. தவறான செய்திகள் வருவது ஆபத்தானது. இதுபோன்ற தகவல்கள் பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைப்பதுடன், அதிருப்தியை ஏற்படுத்தி இறுதியில் பிரச்னைக்கு வழிவகுக்கும். இதில் எச்சரிக்கை தேவை. உண்மையைத் திறம்பட பரப்புவதே ஐஐஎஸ் பணியின் முக்கிய சவால். அதிலும் தவறான செய்திகளை எதிா்த்துப் போராடுவது சவாலானதாக இருக்கும். அது இந்த சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது’ என்றாா் அவா்.