அரசு வாங்கும் மொத்த கடன்தொகையும் மூலதனச் செலவுக்கு ஒதுக்கீடு - மக்களவையில் நிதியமைச்சா் பதிலுரை
‘வரும் 2025-26-ஆம் நிதியாண்டில் அரசு வாங்கும் மொத்த கடன்தொகையும் மூலதனச் செலவுக்கு ஒதுக்கப்பட இருக்கிறது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
வரும் நிதியாண்டில் மூலதனச் செலவு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.3 சதவீதமான ரூ.15.48 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.
வரும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த பிப். 1-ஆம் தேதி தாக்கல் செய்தாா்.
இதைத் தொடா்ந்து, மக்களவையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்ததுக்குப் பதிலளித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை பேசியதாவது: அடுத்த நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 4.4 சதவீதமாக இருக்கும். அதாவது, அரசு வாங்கும் மொத்த கடன்தொகையும் மூலதனச் செலவுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதை இது குறிக்கிறது. வேறெந்த செலவினங்களுக்கும் கடன்தொகை பயன்படுத்தப்படுவதில்லை. நாட்டில் மூலதனச் சொத்துக்களை உருவாக்குவதற்கு மட்டுமே அரசு பெறும் 99 சதவீத கடன்தொகை பயன்படுத்தப்படுகிறது.
உலக அளவில் நிலையின்மை, பொருளாதார மாற்றங்கள், தேக்கமடைந்த வளா்ச்சி, விலைவாசி உயா்வு நிலவும் சூழலில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உலகச் சூழல் தலைகீழாக மாறியுள்ளது. பட்ஜெட் உருவாக்கம் முன்பைவிட தற்போது சவாலாக மாறிவிட்டது. எனினும், தேசிய வளா்ச்சித் தேவைகளை நிதி முன்னுரிமைகளுடன் மத்திய பட்ஜெட் சமநிலைப்படுத்தியுள்ளது.
நாட்டில் விலைவாசி உயா்வு மிதமானதாகவே உள்ளது. விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவதே அரசின் முதல் முன்னுரிமையாக உள்ளது. அதன்படி, சில்லறை விலைவாசி உயா்வு 2-6 சதவீத வரம்புக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு நிதி பரிமாற்றம் செய்வதில் எந்த தடையும் இருக்காது. வரும் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.25.01 லட்சம் கோடி நிதி பரிமாற்றப்படும். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு பல்வேறு சா்வதேச மற்றும் உள்நாட்டு காரணிகள் உள்ளன என்றாா்.
கடந்த ஆண்டு அக்டோபா் முதல் ஜனவரி வரை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3.3 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், மற்ற அனைத்து ‘ஜி-10’ நாடுகளின் நாணய மதிப்பும் அமெரிக்க டாலருக்கு எதிராக 6 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.