'OPS-Nainar' யுத்தம், குளிர் காயும் Stalin & Annamalai! | Elangovan Explains
அரச மரத்தடி! - சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஷோ யுவர் சர்டிபிகேட்ஸ் ராகவன்,
என்று எச் ஆர் கேட்டார்.
பைல் திறந்த ராகவனுக்கு பகிர் என்றது —
பையிலுக்குள் எந்த சர்டிபிகேட்டும் இல்லை.
ஜிப் ஓபன் ஆகி இருந்தது, ஆனால் உள்ளே எந்த சர்டிபிகேட் இல்லை.
ராகவனுக்கு வியர்த்தது.
கஷ்டப்பட்டு இத்தனை ரவுண்டுகள் அட்டென்ட் செய்து,
எச் ஆர் ரவுண்டில் சர்டிபிகேட் கேட்கும்போது, பைலுக்குள் சர்டிபிகேட் இல்லை.
"சார், அது வந்து பைலுக்குள் எந்த சர்டிபிகேட் இல்லை சார்...
எங்கே போனதென்று தெரியவில்லை சார்..."
என்று மென்று முழுங்கினான் ராகவன்.
அந்த ஹெச் ஆர் அதிகாரி, ராகவனை பரிதாபமாக பார்த்தார்.
"ஓகே மிஸ்டர் ராகவன், உங்களுக்கு இரண்டு நாட்கள் டைம் தருகிறோம்.
அதற்குள் சர்டிபிகேட்டை காண்பித்து விட்டு,
ஆஃப்பர் லெட்டர் வாங்கிச் செல்லுங்கள்,"
என்று கூறி அனுப்பி வைத்தார்.
வெளியில் வந்த ராகவனுக்கு, உலகமே இருண்டது போல தோன்றியது.
"எப்படி ஒரு சர்டிபிகேட்டும் இல்லாமல் போயிருக்கும்?
ஜிப் ஓபன் ஆகி இருக்கு...
எங்கே போயிருக்கும் எல்லா சர்டிபிகேட்கேட்டும்?"
இத்தனை வருடங்களாக படித்து வாங்கிய பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பி.காம், எம்.பி.ஏ
என்ற அனைத்தும் ஒரிஜினல் சர்டிபிகேட்டுகள் காணாமல் போயிருந்தன.
இன்டர்வியூக்காக பஸ்ஸில் ஏறும்போது இருந்த சர்டிபிகேட்,
இறங்கும்போது கவனிக்கவில்லை.
ஒருவேளை பஸ்ஸுக்குள்ளேயே விழுந்து இருக்குமோ...?
உடனடியாக நண்பனுக்கு போன் செய்தான்.
> "வாசு, ஒரு பெரிய தவறு நடந்துட்டுச்சு.
என் சர்டிபிகேட் அனைத்தும் காணாமல் போயிருச்சு.
அனேகமா பஸ்ஸிலதான் விழுந்திருக்கும் போலிருக்கு.
கொஞ்சம் ஹெல்ப் பண்ணு..."
சற்று நேரத்தில் வாசுவும் சில நண்பர்களும் பைக்கில் வந்தார்கள்.
> "எந்த பஸ்ல போனே, சொல்லு..."
“ரூட் பஸ்லதான் போனேன்.
இன்டர்வியூ சீக்கிரமா வரணும்னு நினைச்சு ஏறினேன்.”
> "அடப்பாவி! அந்த பஸ் எந்த ஊருக்குப் போறது என்பதே தெரியல.
அதுக்குள்ளே ஏறிட்டே!"
> “குஜிலியம்பாறை பஸ்னு நினைக்கிறேன்...”
> "அடடா, அந்த பஸ்ஸா? சரி இரு..."
உடனே கூகுளில் பஸ் கம்பெனி நம்பரைக் கண்டுபிடித்து,
அவர்களிடம் தொடர்பு கொண்டார்கள்.
அவர்கள் சொன்னார்கள் — பஸ் மணப்பாறையை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.
சர்டிபிகேட் தொலைந்த விவரம் சொல்லி, பஸ்சை நிறுத்தச் சொன்னார்கள்.
ராகவனும் நண்பர்களும் பஸ்ஸில் ஏறி ஒவ்வொரு சீட்டின் அடியிலும் தேடிப் பார்த்தார்கள்.
அங்கேயும் எந்த சர்டிபிகேட்டும் இல்லை!
ராகவனுக்கு தலை சுற்றியது…
மீண்டும் அரச மரத்தடி பஸ் ஸ்டாப்பிற்கு எல்லோரும் வந்து விட்டார்கள். "இப்ப என்னடா பண்ணலாம்? அந்த பஸ் நிறைய ஊர் தாண்டி போகும்டா.
எந்த ஊர்ல உன் சர்டிபிகேட் விழுந்ததோ தெரியல.
யார் கையில் கிடைச்சுதோ தெரியல. சரி யோசிப்போம்,"
என்று அங்கு இருக்கும் ஒரு டீக்கடையில் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ராகவனின் அப்பா சைக்கிளில் வந்தார்.
> "என்னடா ராகவா, வீட்டுக்கு வராமல் இங்கே உட்கார்ந்து இருக்க?
மூஞ்சி எல்லாம் வாட்டமா இருக்கு. என்ன விஷயம்?"
என்று கேட்டார்.
"அபபா... என் சர்டிபிகேட்டெல்லாம் தொலைஞ்சிடுச்சுப்பா.
என்ன செய்வது என்று தெரியல அப்பா,"
என்று ராகவன் கண் கலங்கி சொன்னான்.
அப்பா ஒரு ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு:
> "சர்டிபிகேட்டோட வந்தா வா. வரலேன்னா போ... வராத வீட்டுக்கு,"
என்று சொல்லிவிட்டு சைக்கிளில் கிளம்பி விட்டார்.
ராகவனால் அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. ராகவனின் அப்பாவிற்கு வேலை என்று ஒன்றும் பெரிது கிடையாது.
கல்யாண மண்டபத்தில் கல்யாணங்களுக்கு உணவு பரிமாறும் வேலை செய்து, அதில் வரும் காசில்தான் குடும்பத்தை நடத்தினார்.
அவர் வாளி தூக்கி, கால் வலிக்க பரிமாறி, ராகவனை படிக்க வைத்தார்.
ராகவன் படித்து முடித்து வேலைக்கு சென்ற பிறகுதான்
குடும்பம் தலை நிமிரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்.
இப்போது மொத்தமாக சர்டிபிகேட் தொலைத்து விட்டான் என்றதும்
அவர் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.
எனவே கோப பார்வை பார்த்துவிட்டு:
> "சர்டிபிகேட்டோட வந்தா வா, இல்லையென்றா போ,"
என்று சைக்கிளில் கிளம்பி விட்டார்.
முடிந்தது.
ராகவனுக்கு வேலை கிடைக்கும், அவனால்தான் குடும்பம் தலை நிமிரும் என்ற நம்பிக்கையில் இருந்த குடும்பத்திற்கு
பேரிடியாய் விழுந்தது இந்த சம்பவம்.
அவர்களைப் பொறுத்தவரை அவன் தொலைத்தது சர்டிபிகேட் அல்ல – குடும்பத்தின் நம்பிக்கையை.
மாலை 6 மணி ஆகிவிட்டது.
ராகவன் மெதுவாக தான் இருக்கும் தெருவுக்குள் நுழைந்தான்.
அப்போது கூட அவனுக்கு வீட்டிற்குள் செல்ல மனமில்லை.
எல்லோரும் வீட்டில் அழுது கொண்டிருப்பார்கள்.
நிச்சயம் அம்மா அழுது அரற்றி விடுவார்.
அப்பா திட்டுவார். தங்கை கோபமாக இருப்பாள் என்று தெரியும்.
வீட்டை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு ஜோசியர் வீடு இருக்கும்.
அங்கு எப்போதும் அவரிடம் ஜோசியம் கேட்கவும்,
குறி கேட்கவும் பல பேர் உட்கார்ந்து இருப்பார்கள்.
மெதுவாக அவரிடம் சென்றான்.
> "என்னடா ராகவா? என்ன ஆச்சு?
இங்கே உக்காந்துட்டு இருக்க? ரொம்ப சோகமா இருக்கே.
என்ன விஷயம்?"
என்று ஜோசியர் கேட்டார்.
> "மாமா, இன்னைக்கு காலையில இன்டர்வியூக்குப் போறப்போ
என் சர்டிபிகேட் எல்லாம் தொலைந்துட்டு.அது கிடைக்குமா, கிடைக்காதான்னு தெரியல மாமா...
கொஞ்சம் என்னுடைய ராசி எப்படி இருக்குன்னு பார்த்து சொல்ல முடியுமா?"
என்று ராகவன் கேட்டான்.
ஜோசியரும் சுற்றி இருப்பவர்களும் விக்கித்து போனார்கள்.
> "அடடா பாவமே... இந்த பையன்
படிச்ச எல்லா சர்டிபிகேட்டையும் தொலைச்சுட்டானே...
என்ன பண்ணுவான் தெரியலையே..."
என்று ஜோசியரோடு சேர்ந்து
அங்கு இருந்தவர்கள் அனைவரும் பரிதாபப்பட்டார்கள்.
ஜோசியரும் இவனுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்ற நோக்கில்
> "போடா போ... அரச மரத்தடி பிள்ளையாரை வேண்டிக்கோ.
அவர் நினைச்சா தான் உனக்கு கிடைக்கும்.
போய் பிள்ளையாரை வேண்டிக்கோ,"
என்று சொன்னார்.
ராகவனுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.
"என்ன ஜோசியர் இவரு!"
என்று நினைத்தபடி வீட்டிற்கு வந்தான்
எல்லோரும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
அப்பா கொஞ்சம்கூட பேசவில்லை.
அம்மா அழுது கொண்டே இருந்தாள்.
> "என்னடா ராகவா, இப்படி ஆயிடுத்தேடா?"
என்று விசும்பினாள்.
தங்கை:
> "என்னண்ணா இப்படி பண்ணிட்ட?
கொஞ்சம் பொறுப்பா இருக்க கூடாதா?"
என்று கடுகடுத்தாள்.
உடனே டிரஸ் மாற்றிக்கொண்டு ராகவன் மறுபடியும் டீக்கடைக்கு வந்தான்.
அவன் நண்பர்களும் அமர்ந்திருந்தார்கள்.
> "என்னடா ராகவா, வீட்ல என்ன சொன்னாங்க?"
"இல்லடா... எல்லாரும் ரொம்ப கோவமா இருக்காங்க.
என்ன பண்றதுன்னே தெரியலடா."
> "கவலைப்படாதடா.
நான் இப்பதான் விசாரிச்சேன்.
பள்ளி கல்வித்துறைக்கு எழுதி டூப்ளிகேட் வாங்கிடலாமாம்.
அதே மாதிரி நம்ம யூனிவர்சிட்டிக்கும் அப்ளை பண்ணி
டிகிரி சர்டிபிகேட் வாங்கிடலாம்.
அது ஒன்னும் பிரச்சனை இல்லடா.
ஆனா வரதுக்கு ஒரு 30-40 நாள் ஆகும்னு நினைக்கிறேன்.
ஆன்லைன்ல கூட அப்ளை பண்ணிக்கலாம் போல இருக்கு — விசாரிச்சிட்டேன்டா,"
என்று நண்பன் சொன்னான்.
ராகவனுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
ஆனாலும் அதுவரை நம்மால் எந்த வேலைக்கும் அப்ளை பண்ண முடியாது. மறுபடியும் ஓபனிங் இருக்கணும் என்பது ஒரு கவலை.
> "அதுக்கு முன்னாடி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கணும் போல இருக்கு. அதுக்கப்புறம் பேப்பர்ல ஆட் கொடுக்கணும் போல இருக்கு.
இரண்டும் வைத்துத்தான் யூனிவர்சிட்டிக்கும்,
பள்ளி கல்வித்துறைக்கும் அப்ளை பண்ண முடியும்,"
என்று இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
டீக்கடை பார்வதியம்மாளும்
இவர்களிடம் வந்து கேட்டார்:
> "என்னடா சொல்லுங்கடா, ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க?
என்ன பிரச்சனை?" என்று கேட்டாள்.
> "அட போம்மா... நாங்களே ஆயிரத்தெட்டு பிரச்சனைல இருக்கோம்.
டீ குடும்மா... டீ குடிச்சா தான் கொஞ்சம் பிரச்சனை தீரும் போல இருக்கு..." என்று சொல்லிவிட்டு, எல்லோரும் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.
காலையில் பேப்பர்காரர் வந்தார்.
> "தம்பி... நான் சொல்றத கேளுப்பா...
ஒரு ஆட்டோ எடுத்துக்கோ. மைக் செட் போட்டுக்கோ.
அந்த பஸ் போன ரூட்டுல முழுக்க நம்ம சொல்லிக்கிட்டே போலாம் –
‘சர்டிபிகேட் தொலைந்து விட்டது, யாராவது எடுத்திருந்தால் கொடுத்துடுங்க’ன்னு...
அதே மாதிரி பேப்பர்லயும் ஆட் கொடுத்துவிடலாம்."
பக்கத்து வீட்டு கோபாலன் வந்தார்:
> "வாடா ராகவா...
நம்ம போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் கொடுத்து விட்டு வரலாம்.
அந்த எஃப்.ஐ.ஆர் காப்பியோடதான்
யூனிவர்சிட்டிக்கு அப்ளை பண்ணனும்."

> "சரி... இனிமே வேற வழி இல்லை.
போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளைன் கொடுத்து விட்டு வரலாம்,"
என்று சட்டை மாட்டிக்கொண்டு கிளம்பினான் ராகவன்.
அரச மரத்தடி பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான்.
அங்கே பிள்ளையார் சிலை இருந்தது.
எல்லாம் கைவிட்டது போல தோன்றியது ராகவனுக்கு.
"சரி... இறுதியாக, போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் கொடுக்க முன்னாடி இந்த பிள்ளையாரிடமும் ஒரு அப்ளிகேஷன் கொடுத்து விடலாமே!" என்ற நம்பிக்கையில்:
> "பிள்ளையாரப்பா... என் சர்டிபிகேட்டெல்லாம் திருப்பி கொடுப்பா..."
என்று வேண்டிக்கொண்டான்.
அப்போது டீக்கடை பார்வதியம்மாள்
மறுபடியும் வந்து கேட்டாள்:
> "என்னடா ராகவா, ஏதாவது பிரச்சனையா?
நைட் ஃபுல்லா என் கடையில் பேசிக்கிட்டு இருந்தீங்க…
இப்போ பேப்பர்காரர் கூட சொன்னாரு,
ஏதோ பேப்பர்லாம் தொலைச்சுப்புட்டியாம்னு…
சர்டிபிகேட் எல்லாம் தொலைச்சுப்புட்டியாம்னு…"
> "தெரியல பார்வதியம்மா... எங்க போச்சுன்னு தெரியல…
பஸ்ல ஏறினேன் நம்ம அரச மரத்தடி பஸ் ஸ்டாப்பிலதான்…
இறங்கி போய் பார்த்தா காணோம்…
நேத்திக்குதான் காலையில..."
என்று சொன்னான் ராகவன்.
பார்வதியம்மாள் டீக்கடை எரவானத்தில சொருகி வைக்கப்பட்டிருந்த பைலை எடுத்து:
> "இதானு பாரு... நீ தொலைச்சது இந்த பேப்பரான்னு பாரு.
இதெல்லாம் உன் பேப்பரா? நீதான் விட்டுட்டு போனியா?
நேத்து உன் பின்னாடி பஸ் ஏறினவரு, பஸ்ல இருந்து இறங்கி
என்கிட்ட கொடுத்துட்டு போனாரு.
‘பஸ் ஏறுன பையன் இத விட்டுட்டான்’னு சொல்லி...
நான் வேலை மும்முரத்தில மறந்துட்டேன்..."
ராகவன் வாங்கிப் பார்த்தான்...
அத்தனையும் அவன் ஒரிஜினல் சர்டிபிகேட்டுகள்!
போன உயிரே திரும்பி வந்த மாதிரி இருந்தது...
கண்கள் கலங்கின.
> "அப்படியா பார்வதியம்மா... ரொம்ப நன்றி.
இதை யாரு உங்களிடம் கொடுத்தார் தெரியுமா?"
> "அவரோட பேர் தெரியலப்பா…
அடிக்கடி நம்ம டீ கடைக்கு வருவாரு…
நம்ம இயேசு கோவில் தெருவிலதான் இருக்காருனு நினைக்கிறேன்…"
ராகவன் பூ, பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கிக்கொண்டு
அவரைக் தேடிக்கொண்டு இயேசு கோவில் தெருவில் சைக்கிளில் சென்றான்...
அப்போது ஒருவர் அவனை நிறுத்தி "என்னப்பா, சர்டிபிகேட் எல்லாம் வாங்கிட்டியா?"
என்று கேட்டார்.
ராகவனுக்கு புரியவில்லை.
> "சார்... என்ன சொல்றீங்க?"
அவர்:
> "ஆமாம்பா... நேத்து பஸ் ஏறும்போது
உன் பைலிலிருந்து எல்லா சர்டிபிகேட்டும் கீழ விழுந்துச்சு.
நான் தான் எடுத்து அந்த டீக்கடையில கொடுத்து
உன்கிட்ட கொடுக்க சொன்னேன்.
வாங்கிட்டியா?"
ராகவன் கண்கள் கலங்கின.
அப்படியே நெடுஞ்சாண் கிடையாக அவர் காலில் விழப் போனான்.
> "ரொம்ப நன்றி அண்ணா...
நீங்கள் என் சர்டிபிகேட்டை மட்டும் இல்ல,
வாழ்க்கையையே திருப்பி கொடுத்துட்டீங்க.
உங்களைதான் தேடிகிட்டு வரேன்..."
என்று சொல்லி அவரிடம் ஸ்வீட்டும், பழமும் கொடுத்தான்.
அவர்:
> "இதெல்லாம் எதுக்குப்பா…"
என்று மறுத்துவிட்டார்.
> "அண்ணா, உங்க பேர் தெரிஞ்சுக்கலாமா?"
என்று கேட்டான் ராகவன்.
அவர் சிரித்துக்கொண்டு:
> "என் பேர் செபாஸ்டின்."
ராகவனின் கண்ணுக்கு அவர்
அரச மரத்தடி பிள்ளையாராகவே தெரிந்தார்.
முற்றும்.

