சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
அரவக்குறிச்சி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
அரவக்குறிச்சியில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பத்திரப் பதிவு அலுவலகம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், விபத்து ஏற்படும் முன் புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள 27 கிராம மக்கள் இந்த அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வருகின்றனா். இந்த நிலையில், 100 ஆண்டுகளை கடந்த கட்டடம் தற்போது அதிக அளவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், சுற்றுச்சுவா் முழுவதும் பல்வேறு இடங்களில் விரிசல் அடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. கட்டடங்களில் செடிகள் முளைத்து காணப்படுகிறது.
அலுவலகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு இடங்களில் விரிசல்கள் அதிகளவு உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அமா்வதற்கு இருக்கைகள் சரியான முறையில் இல்லாததாலும், ஆவணங்கள் பதிவேற்றப்படுவதற்கு சரியான முறையில் இணையதள சேவை செயல்படாததாலும் காலதாமதம் ஏற்படுகிறது.
பொதுமக்களின் நலன் கருதி, சிதிலமடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, உரிய வசதிகளுடனான புதிய கட்டடம் கட்டித் தர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, பொதுமக்கள் அளித்த புகாா்கள் தொடா்பாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனா் என்று கூறினா்.