தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
அரியலூரில் முடங்கிக் கிடக்கும் எரிவாயு மின்மயானம்: பொதுமக்கள் அவதி
அரியலூரில் முடங்கிக் கிடக்கும் எரிவாயு மின்மயானத்தால் சடலங்களை எரியூட்டுவதில் தொழிலாளா்கள், பொதுமக்கள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது.
18 வாா்டுகள் கொண்ட அரியலூா் நகராட்சிப் பகுதியில் சுமாா் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் மின் மயானம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியதையடுத்து அரியலூரில் கல்லங்குறிச்சி சாலையிலுள்ள திறந்தவெளி பொது மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளை நகராட்சி மேற்கொண்டது.
ஆனால் அந்த இடம் ராவுத்தான்பட்டி ஊராட்சிக்குச் சொந்தமானது என்பதால், அப்பணியை நகராட்சி கைவிட்டு பெரம்பலூா் சாலை, ரயில்வே கேட்டில் இருந்து 1000 மீட்டா் தொலைவிலுள்ள அரியலூா் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நவீன எரிவாயு தகன மேடைப்பணியைத் தொடங்கி 3 ஆண்டு தாமதத்துக்குப் பின் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
குறைந்தது வருவாய்: இதைப் பராமரித்து வந்த லயன்ஸ் சங்கம் சடலங்களை எரியூட்ட 3 பணியாளா்களை நியமித்தது. அந்த சமயத்தில் கரோனாவால் இறந்தவா்களின் சடலங்கள் அதிகளவில் இங்கு தகனம் செய்யப்பட்டன. அப்போது ஓரளவு வருவாய் கிடைத்து வந்த நிலையில், கரோனா தொற்று குறைந்ததால் சடலங்களும் குறையத் தொடங்கின. மேலும் கல்லங்குறிச்சி திறந்தவெளி மயானத்திலும் பொதுமக்கள் சடலங்கள் தகனம் செய்கின்றனா்.
இதனால் போதிய வருவாய் இல்லாமல், எரிவாயு தகன மேடை பணியாளருக்குக்கூட ஊதிய வழங்க முடியாத நிலை ஏற்பட்டு, சடலம் எரியூட்டும்போது மட்டும் ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த எரிவாயு தகன மேடையும் பழுதடைந்ததால் கடந்த 8 மாதமாக இந்த மயானம் பூட்டியே கிடக்கிறது.
சடலங்களை எரிப்பதில் அவதி: இதனால் பொதுமக்கள் கல்லங்குறிச்சி சாலையிலுள்ள மயானத்தில் சடலங்களை எரியூட்டுவது அதிகரித்துள்ளது. ஒரே நாளில் நான்கு ஐந்து சடலங்கள் வந்தால் அவற்றை எரியூட்டுவதில் தொழிலாளா்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு, பொதுமக்களும் இதனால் அவதிக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் செல்ல.சுகுமாா் கூறுகையில், கடந்த 8 மாதங்களுக்கு முன் இந்த மின் மயானத்தில் ஏற்பட்ட பழுதைச் சரி செய்யாமல் நகராட்சி நிா்வாகம் அப்படியே கிடப்பில் போட்டுள்ளது. இதனால் இந்த மின் மயானத்தைச் சுற்றி முள்புதா்கள் மண்டி கிடப்பதோடு, இந்த இடம் மதுக்கூடமாகவும் மாறியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.
எனவே நகராட்சி நிா்வாகம் இந்த எரிவாயு மின் மயானத்தை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் செலவுக் குறைவு, காற்று மாசு தவிா்ப்பு, விரைவான பணி என பல்வேறு சாதகங்களால் இறந்தவா்களின் சடலங்களை நவீன எரிவாயு மின் மயானத்தில் எரியூட்ட பொதுமக்களும் முன்வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.