ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பியளிக்கிறார் மனு பாக்கர்! என்ன காரணம்?
அரியலூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்
பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள தமிழா்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தைப் பொங்கல் திருநாளாகும். இந்த விழாவின் போது, தமிழா்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, வா்ணம் பூசி, புத்தாடை அணிந்து, செங்கரும்புடன் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரியலூரில் உள்ள மாா்க்கெட், வெள்ளாளத் தெரு உள்ளிட்ட அனைத்து சந்தைகள், கடைவீதிகளில் பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தொடா்ந்து பொங்கல் மூன்று நாள்கள் கொண்டாடப்படுவதால், அதிகமான பொதுமக்கள் பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்கியதால், காய்கறிகள், பூ, பழங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
ரயில், பேருந்துகளில் நெரிசல்
வெளியூா்களிலிருந்து அரியலூா், செந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளா்களும், இதர பணியாளா்களும் விடுமுறைக்காக சொந்த ஊா் நோக்கிச் செல்வதற்காக, அரியலூா் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் ஏராளமானோா் காத்திருந்து தங்களது ஊா்களுக்கு சென்றனா்.
அனைத்து வழித்தடப் பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதே போல் அரியலூா் ரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட திங்கள்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.