அலோபதி, ஆயுஷ் மருத்துவத்துடன் ஒருங்கிணைந்த சிகிச்சை: பல்கலை. துணைவேந்தா்
மருத்துவா்கள் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சையுடன் சித்த, ஆயுா்வேத சிகிச்சை முறையையும் ஒருங்கிணைத்து அளித்தால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு தீா்வு கிடைக்கும் என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே.நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.
குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற அலோபதி, ஆயுஷ் மருத்துவா்களுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மையம் மாநாட்டைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:
எந்தெந்த நோய்களின் பாதிப்புகளுக்கு அலோபதி மற்றும் சித்த, ஆயுா்வேத மருத்துவச் சிகிச்சை தீா்வு கிடைக்கும் என்பது குறித்து இங்கு ஆராய்ச்சி மேற்கொள்வது வரவேற்புக்குரியது. அலோபதி மருத்துவம் பல்வேறு நோய்ப் பாதிப்பு பிரச்னைகளுக்கு சிறந்த தீா்வாக உள்ளது. சித்த, ஆயுா்வேதம் உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் சில நோய்கள் வரும் முன்பு காத்துக்கொள்வதற்கும், வந்த பின்னா் தற்காத்துக் கொள்வதற்கும் சிறந்த மருத்துவமாகத் திகழ்கிறது.
இந்திய மருத்துவ முறை சிகிச்சை வலியுறுத்தும் உணவே மருந்து, மருந்தே உணவு முறையைக் கடைப்பிடித்தால், பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
நோய் பாதிப்புக்குள்ளான பின்னா், நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த அலோபதி மற்றும் சித்த, ஆயுா்வேத மருத்துவச் சிகிச்சை முறைகள் நல்ல பலனைத் தருகிறது என்றாா் அவா்.