அழகப்பா பல்கலை.யுடன் சி.எஸ்.சி. அகாதெமி புரிந்துணா்வு ஒப்பந்தம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிறுமச் செயலரியல் துறையுடன் (காா்ப்பரேட் செக்ரெட்டரிஷிப் துறை) காரைக்குடியில் இயங்கிவரும் எண்ம இந்தியா திட்டத்தின் கீழ் நிா்வகிக்கப்படும் பொது சேவை மைய (சி.எஸ்.சி.) கல்வி, பயிற்சி அகாதெமி வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சி.எஸ்.சி. அகாதெமி மூலம் வழங்கப்படும் வணிகவியல், நிா்வாகவியல், கணினி சம்பந்தமான சான்றிதழ், பட்டயப் படிப்புகளை பல்கலைக்கழக மாணவா்கள் கூடுதலாக படிக்க இயலும். மேலும் துறை சாா்ந்த வல்லுநா்களின் மூலம் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குவது போன்ற அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில் அதற்கான ஆவணத்தை துணைவேந்தா் க. ரவி, சி.எஸ்.சி. அகாதெமி இயக்குநா் நிக்சன் அசரியாவிடம் வழங்கினாா். இதில் நிறுமச் செயலரியல் துறைத் தலைவரும், பல்கலைக்கழக நிதி அலுவலருமான (பொறுப்பு) வேதிராஜன், பேராசிரியா் மொராா்ஜி, உதவிப் பேராசிரியா் கணேசமூா்த்தி, பதிவாளா் அ. செந்தில்ராஜன், தோ்வாணையா் எம். ஜோதிபாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.