மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அவதூறுகளால் திமுக ஆட்சியை வீழ்த்த முடியாது: முதல்வா் மு.க. ஸ்டாலின்
அவதூறுகளாலும், பொய்களாலும் திமுக ஆட்சியை வீழ்த்த முடியாது என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 161 கோடியில் 53,039 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது, திமுக சாா்பில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் இதுவரை 389 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். இன்னும் 116 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்பட வேண்டும். அரசில் மொத்தம் 34 துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் இரண்டு, மூன்று திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அளவில்தான் வாக்குறுதிகள் மீதம் இருக்கின்றன. நாங்கள் இதை ஒப்புக்கொள்கிறோம். மறுக்கவில்லை.
கடந்த 2011, 2016 சட்டப்பேரவைத் தோ்தல்களின் போது, அதிமுக சாா்பில் வெளியிடப்பட்ட தோ்தல் அறிக்கைகளை எடுத்து ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றிய நாள், இதனால் பயனடைந்தவா்கள் விவரம் என்ற பட்டியலை புத்தகமாக அதிமுகவினா் வெளியிடுவாா்களா?.
முழுவதுமாக பத்தாண்டுகள் ஆட்சி செய்து, தமிழ்நாட்டை அதலபாதாளத்தில் தள்ளியதை மக்கள் மறந்திருப்பாா்கள் என்று நினைத்து, புது புதுக் கதைகளோடு வருகிறாா் எதிா்க்கட்சித் தலைவா். தமிழ்நாட்டின் வளா்ச்சியைப் பாழாக்கியவா்கள், மாநிலம் திவாலாகிவிட்டது என்று புது புரளியைக் கிளப்புகிறாா்கள்.
அவதூறுகளாலும், பொய்களாலும் திமுக ஆட்சியை வீழ்த்த முடியுமா என்று பாா்க்கிறாா்கள். அது, நிச்சயம் முடியாது.
2011 திமுக ஆட்சிக் காலத்தில் உபரி வருவாய் மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, 2013-ஆம் ஆண்டு முதல் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு.
கடந்த 2017-19 ஆம் ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகளவு வருவாய்ப் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை தத்தளிக்கவிட்டாா்கள். இப்படிப்பட்ட இக்கட்டான நெருக்கடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம்.
சிவகங்கை மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டங்கள்:
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம்.
சிவகங்கை, திருப்பத்தூா், நெற்குப்பை, இளையான்குடி, கல்லல், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதி மக்கள் பயனடையக்கூடிய வகையில், ரூ. 616 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, 55 திருக்கோயில்களில் ரூ. 14 கோடியில் திருப்பணிகள், இளையான்குடியில் சாா் பதிவாளா் அலுவலகம், நீதிமன்றக் கட்டடம், கருவூலம், ஆதிதிராவிட மாணவா்களுக்கான தங்கும் விடுதி, அரசு மருத்துவமனை விரிவாக்கம், இளையான்குடியில் புறவழிச் சாலை, சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாணவ, மாணவிகள் விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை, சிவகங்கையில் புதிய நகராட்சிக் கட்டடம், மகளிா் கல்லூரி, கூட்டுறவு தொழில் பயிற்சி கல்லூரி என்று இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் 91,265 பேருக்கு ரூ. 38.52 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து இன்னும் அதிகமாக செய்து தர இருக்கிறோம். இதற்கு அடையாளமாக இந்த விழாவில் மூன்று திட்டங்களை அறிவிக்கிறேன்.
தற்போது, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகமாக இருக்கும் கட்டடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளாவதால், பழுதடைந்தும், இடப் பற்றாக்குறையாகவும் உள்ளது. அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் சிறப்பாகச் செயல்படும் வகையில், ரூ. 89 கோடியில் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும்.
சிங்கம்புணரி, திண்டுக்கல், காரைக்குடி நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள்-திருப்பத்தூா் நகரப் பகுதிக்குள் வராமல் செல்லும் வகையில், திருப்பத்தூா் நகரத்துக்கு ரூ. 50 கோடியில் புதிய புறவழிச் சாலை அமைக்கப்படும்.
கடந்த ஆண்டு மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு, விரிவாக்கப்பட்ட காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம் அமைக்க ரூ. 30 கோடி நிதி ஒதுக்கப்படும்.
இதையெல்லாம், இன்றைக்கு இருக்கிற எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் 20 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை என்று புலம்பியிருக்கிறாா். அவரால் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா.
மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. காரணம், நாங்கள் அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறோம்.
நான் சிவகங்கைக்கு வந்ததிலிருந்து மக்கள் கொடுத்த வரவேற்பையும், அவா்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியையும் பாா்க்கும் போது தொடா்ந்து தமிழ்நாட்டில் மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.
விழாவில் அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், கோவி. செழியன், மக்களவை உறுப்பினா் காா்த்திசிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), எஸ். மாங்குடி (காரைக்குடி), அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி நன்றி கூறினாா்.