ஆக்கபூா்வ திட்டமில்லாத பட்ஜெட்: இந்திய கம்யூனிஸ்ட்
புதுவை முதல்வா் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஆக்கபூா்வத் திட்டங்கள் இல்லாத நிலையில் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநில சமுதாய வளா்ச்சிக்கான ஆக்கபூா்வ திட்டங்கள் ஏதும் முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.
அதில் ஊதியம், ஓய்வூதியம், கடன், வட்டி மற்றும் இலவசத் திட்டங்களுக்கு 80 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், நீடித்த வளா்ச்சிக்கான நிதி ஏதுமில்லை.
விவசாயத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் அறிவிக்கப்பட்டதுடன், ஆண்டுதோறும் நிபந்தனையின்றி அதை வழங்க வேண்டும்.
நிதிநிலை அறிக்கையில் நல வாரியம் அமைப்பது குறித்த அறிவிப்பின்றி, தொழிலாளா் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
துணைநிலை ஆளுநா் உரையில் ஜவுளிப் பூங்கா அறிவிப்புக்கு, நிதிநிலை அறிக்கையில் நிதி விவரமில்லை. நலிவடைந்த கூட்டுறவு நிறுவனங்கள் லாபகரமாக செயல்படுத்த முழுமையான நிதி, திட்டம் ஏதுமில்லை.
பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையைத் தீா்க்கவும், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் திட்டமில்லை என்றாா் அ.மு.சலீம்.