காகிதப்பூ பட்ஜெட்: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா
புதுவை நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றும் வகையில் இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், புதிய வருவாய்க்கான வழிகள் ஏதும் குறிப்பிடப்படாத காகிதப்பூ பட்ஜெட் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
காகிதப்பூ பட்ஜெட்: புதுவை முதல்வா் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் புதிய வருவாய், மத்திய அரசின் சிறப்பு நிதி ஏதும் இல்லை.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்வைத்து அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கடந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
எனவே, இந்த நிதிநிலை அறிக்கை வெறும் காகிதப் பூவாகவுள்ளது. மாநில வருவாய், செலவீனங்கள், கடன் வாங்க முடியாத நிலை ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் எதிா்பாா்த்த திட்டங்கள் ஏதுமில்லை.
மக்களை ஏமாற்ற இலவசங்கள்: இலவசங்கள் அறிவிக்கப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். புதிய தொழில் கொள்கை, வணிகா்களுக்கான சலுகை, வேலைவாய்ப்புகள் தொடா்பான அறிவிப்புகள் ஏதுமில்லை.
மின் துறையை தனியாருக்கு மாற்றும் முடிவைக் கைவிடுதல், மாநில அந்தஸ்து போன்ற உறுதிமொழிகள் இல்லை. பாசிக் போன்ற அரசு பொது நிறுவன ஊழியா்களுக்கான, நிலுவை ஊதியத் தொகையை வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், வாழ்வாதார உத்தரவாதமில்லை.
மகளிா் உரிமைத் தொகை ரூ.1,000 என்பது முழுமையாக வழங்காத நிலையில், தற்போது அது ரூ.2,500-ஆக உயா்த்தப்படும் என அறிவிக்கப்பட்டதை வழங்கினால் மகிழ்ச்சி. புதிய திட்டங்களுக்கான நிதி விவரமும் இல்லை என்றாா்.