Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வா...
ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு: 3 மாதங்களில் முடிவெடுக்க உத்தரவு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ராயகோபுரம் அருகே உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், அதிகாரிகள் 3 மாதங்களில் ஆய்வு செய்து உரிய முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
சென்னை ஆலயம் காப்போம் நிறுவனத் தலைவா் பி.ஆா். ரமணன் தாக்கல் செய்த மனு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவா் கோயில் ராயகோபுரம் பழைமையான சின்னமாகும். இந்தப் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. மேலும், இந்த கோபுரத்தைச் சுற்றி தனி நபா்கள் ஆக்கிரமித்திருப்பதால் அது பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ராயகோபுரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் அரசு அலுவலா்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, ராயகோபுரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து 3 மாதங்களில் உரிய முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.