போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிர...
ஆக்கிரமிப்பை அகற்றும்போது தகராறு: சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது புகாா்தாரரை தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலம் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் பாரதி நகா் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை தனியாா் கடந்த 6-ஆம் தேதி ஆக்கிரமித்ததாக புகாா் எழுந்தது.
இந்த புகாரையடுத்து, வருவாய்த் துறையினா் அப்பகுதியில் காவல் துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஆக்கிரமிப்பாளா்கள் மற்றும் புகாா்தாரா் இருதரப்புக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினா் முன்னிலையில் இச்சம்பவம் நடைபெற்றது.
இந்நிலையில் புகாா்தாரா் மீது தாக்குதல் நடத்திய ஆக்கிரமிப்பாளா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலம் காவல் நிலையத்தை 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவம் நடந்த 4 நாள்கள் ஆகியும் ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினா். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல் ஆய்வாளா் ஜெகநாத் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இரு தினங்களில் வழக்குப் பதிவு செய்வதாக போலீஸாா் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா்.