CSK : 'சென்னை அணியில் சஞ்சு சாம்சனா?' - ஐ.பி.எல் இன் டிரேட் விதிகள் சொல்வதென்ன?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் தங்கள் அணிக்கு வாங்கவிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. சென்னை அணியால் சாம்சனை வாங்க முடியுமா? ஐ.பி.எல் இன் டிரேட் விதிகள் சொல்வதென்ன?

சென்னை அணி அஷ்வினை கொடுத்துவிட்டு ராஜஸ்தான் அணியிடமிருந்து சாம்சனை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர். இதன்பிறகு இந்த ட்ரேட் செய்தி பெரும் பேசு பொருளானது.
சமீபத்தில் ஐ.பி.எல் நடந்த மிகப்பெரிய ட்ரேட் ஹர்திக் பாண்ட்யாவுடையதுதான். மும்பை அணி குஜராத் அணியிடமிருந்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கியிருந்தது. அதற்கு ஈடான தொகையை மும்பை அணி குஜராத்துக்குக் கொடுத்திருந்தது.

ஐ.பி.எல் யை பொறுத்தவரைக்கும் வீரர்களை ட்ரேட் செய்வதற்கென குறிப்பிட்ட காலகட்டம் இருக்கிறது. அதாவது, ஒரு சீசன் முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்ததிலிருந்து ஏலத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு வரைக்குமாக என இந்த இடைப்பட்ட காலத்தில் வீரர்களை ட்ரேட் செய்ய முடியும். அதேமாதிரி, ஏலம் முடிந்ததிலிருந்து சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு வரைக்கும் வீரர்களை ட்ரேட் செய்ய முடியும்.
ஒரு அணி இரண்டு முறைகளில் வீரர்களை ட்ரேட் செய்ய முடியும். இன்னொரு அணியிலிருந்து ஒரு வீரரை ட்ரேட் முறையில் வாங்கும்போது, அந்த வீரர் ஏலத்தில் வாங்கப்பட்ட தொகையை விற்கும் அணிக்குக் கொடுக்க வேண்டும். இது முழுக்க முழுக்க பணத்தின் அடிப்படையில் நடக்கும் ட்ரேட். இப்படியில்லாமல், ஒரு வீரருக்கு மாற்றாக இன்னொரு வீரரை கொடுத்து பண்டமாற்று முறையிலும் அணிகள் வீரர்களை ட்ரேட் செய்யலாம்.

அதேமாதிரி, 'Transfer Fee' என்றும் ஒன்று உண்டு. இந்த ட்ரேட் பேச்சுவார்த்தையில் ஒரு அணி இன்னொரு அணிக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை 'Transfer Fee' ஆகக் கொடுத்து இந்த டீலை வெற்றிகரமாக முடிக்கலாம். இந்த Transfer Fee என்பது இவ்வளவு தொகைதான் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. மேலும், இவ்வளவு தொகையை ஒரு அணி Transfer Fee ஆகக் கொடுத்திருக்கிறது என வெளியிலும் சொல்ல வேண்டியதில்லை. ஐ.பி.எல் நிர்வாகத்துக்கு மட்டுமே தெரியப்படுத்தினால் போதும். ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணியிலிருந்து தங்கள் அணிக்கு வாங்க மும்பை அணி ஒரு பெரிய தொகையை Transfer Fee ஆகக் கொடுத்திருந்தது என தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியிலிருந்து அஷ்வினைக் கொடுத்துவிட்டு சாம்சனை வாங்க சென்னை அணி திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் உலாவிக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். சஞ்சு சாம்சனை எடுப்பதாக முடிவெடுத்தால் அது சென்னை அணிக்கு சாதகமா உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்