ஆசிரியர் கொலை: "சம்பவ இடத்தில் இருந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங்...!"- அன்பில் மகேஸ் கூறியதென்ன?
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியிருக்கிறார்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் ரமணி பணிபுரிந்து வந்திருக்கிறார். 4 மாதங்களுக்கு முன்புதான் ரமணி பணியில் சேர்ந்திருக்கிறார். 26 வயதான ஆசிரியர் ரமணியை, 30 வயதான மதன்குமார் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார். ரமணியைப் பெண் கேட்டு வீட்டுக்கும் சென்றிருக்கிறார். ஆனால் அவருக்குப் பெண் தர ரமணியின் பெற்றோர் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மதன் குமார் ரமணியைப் பள்ளியில் வைத்தே கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ், " தஞ்சை மாவட்டத்தில் நடந்த மிகக்கொடுமையான ஒரு நிகழ்வு இது. ஆசிரியரின் மறைவு வேதனை அளிக்கிறது. என்ன பிரச்னையாக இருந்தாலும் பள்ளி வளாகத்தில் வந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடாது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எங்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்தார். சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்துவிட்டனர். சம்பவ இடத்தில் இருந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறோம். ஆசிரியரின் குடும்பத்திற்கு நாங்கள் என்றும் துணை நிற்போம். நடந்தது என்ன? என்பதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...