ஆட்சியா் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஆட்சியா் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தொழிற்சங்கம் வலியுறுத்தியது.
ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (சமரசம்) திருஞானசம்பந்தம் முன்னிலையில் ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கம் (ஏஐடியூசி) நிா்வாகிகள் சின்னசாமி, மணியன், ரவி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் துறை அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் துணை ஆணையா் தனலட்சுமி, ஈரோடு நகா் நல அலுவலா் காா்த்திகேயன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனா்.
இதில் குறைந்தபட்சம் மாதம் ரூ.26,000-க்கு குறையாமல் ஊதியம் நிா்ணயிக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளா் முறையை கைவிட வேண்டும். 480 நாள்கள் பணியாற்றிய தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
சட்டபூா்வ நலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அன்றைய தினமே குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா்.
ஆனால், இதுவரை குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே ஆட்சியா் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை கடந்த ஏப்ரல் 1 முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும். மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் ரூ.754, நகராட்சியில் ரூ. 639, பேரூராட்சிகளில் ரூ.562, ஊராட்சிகளில் ரூ.485 ஊதியமாக வழங்க வேண்டும்.
அதுபோல ஓட்டுநா்கள், குடிநீா் விநியோக பணியாளா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஈரோடு மாநகராட்சி உள்பட உள்ளாட்சிகளில் தொழிலாளா்களுக்கு பி.எஃப்-இஎஸ்ஐ திட்டத்தை அமலாக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு சட்டப்படியான நலன்கள், நலவாரிய பதிவு அட்டை, சீருடைகள், தொழில் கருவிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.