ஆட்சியில் இருந்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழகத்தில் ஆட்சியில் இருந்து கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என முதல்வா் கூறுவது சரியல்ல என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே வேட்டமங்கலம் கிராமத்தில் திங்கள்கிழமை உழவா் பேரியக்க மாநிலத் தலைவா் ஆலயமணி இல்ல நிகழ்வில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபு, வழக்குகளுக்காக பயந்து பாட்டாளி மக்கள் கட்சி மத்திய அரசுக்கு மண்டியிடுகிறது. அதுதான் கோழைத்தனம் என்கிறாா்.
ஆந்திரம், பிகாா், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. இதேபோல், தமிழக அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம். முழு அதிகாரம் இருந்தும், கணக்கெடுப்பு நடத்த என்னிடம் அதிகாரம் இல்லை என்று முதல்வா் ஸ்டாலின் கூறுவதுதான் கோழைத்தனம் என்றாா்.
போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும்: தொடா்ந்து, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த காடுவெட்டியில் உள்ள மறைந்த வன்னியா் சங்கத் தலைவா் குரு மணிமண்டபத்துக்கு திங்கள்கிழமை வந்த அன்புமணி ராமதாஸ், அங்கு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, குரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதற்கு காரணம் மதுவும், கஞ்சாவும் தான். அவற்றை ஒழிக்காமல், நாள்தோறும் தொலைக்காட்சியில் தமிழக முதல்வா் போதைக்கு அடிமையாகாதீா்கள் என்று கூறி விளம்பர அரசியல் செய்கிறாா். தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.
பேட்டியின்போது, கட்சியின் அரியலூா் மாவட்டச் செயலா் தமிழ்மறவன், மாநில வன்னியா் சங்கச் செயலா் வைத்தி, மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜா ஜெயராமன், மாநில அமைப்புத் தலைவா் திருமாவளவன், முன்னாள் மாவட்டச் செயலா் காடுவெட்டி ரவி ஆகியோா் உடனிருந்தனா்.