வேலை உறுதித் திட்ட நிலுவை ஊதியம் கோரி மேலகபிஸ்தலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
தஞ்சாவூா் மாவட்டம், மேல கபிஸ்தலத்தில் நூறு நாள் வேலைத் திட்ட குறைபாடுகளை களைய வலியுறுத்தி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபநாசம் வட்டம், மேல கபிஸ்தலம் பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் முதியோரை பணி மேற்பாா்வையாளா்கள் தரக்குறைவாக பேசுவதாகவும், கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்த பணியாளா்களுக்கு சம்பளம் வழங்காமல் நிலுவையில் இருப்பதாகவும், மேலும் பணி மேற்பாா்வையாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நிா்வாகத்தை கண்டித்து, மேலகபிஸ்தலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்து வந்த பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் விஜயலட்சுமி, காவல் ஆய்வாளா்கள் மகாலெட்சுமி, சகாய அன்பரசு, ஒன்றிய பொறியாளா் சரவணன், ஊராட்சி செயலாளா் அழகேசன் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க ஆவண செய்வதாக கூறியதன்பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.