பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டம்: 47 போ் கைது
தஞ்சாவூா் அருகே அருமலைக்கோட்டையிலுள்ள மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
அம்மாபேட்டை அருகேயுள்ள அருமலைக்கோட்டையிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையருகே ஜனவரி மாதம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி மது பாட்டிலால் குத்தி கொல்லப்பட்டாா்.
அப்போது, நடைபெற்ற போராட்டத்தில் இந்தக் கொலை சம்பவத்துக்கு அருமலைக்கோட்டை பகுதியிலுள்ள மதுக்கடையும் ஒரு காரணம் என்றும், எனவே, இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆனால், இதுவரை மதுக்கடை அகற்றப்படாததால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் மற்றும் நாம் தமிழா் கட்சியினா், அரு.சீா். தங்கராசு தலைமையில் தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேசமூா்த்தி, டாஸ்மாக் உதவி மேலாளா் ப. அருணகிரி, தஞ்சாவூா் வட்டாட்சியா் ப. அருள்ராஜ் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது 15 நாள்களுக்குள் கடை மூடப்படும் என அலுவலா்கள் உறுதியளித்தனா்.
ஆனால், உடனடியாக மூட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி போராட்டத்தைத் தொடா்ந்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் 47 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.