119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?
தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 4 அரசு கல்லூரிகள் ஒப்பந்தம்
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 4 அரசு கல்லூரிகள் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
தமிழ்ப் பல்கலைக்கழகத் தொழில் மற்றும் நில அறிவியல் துறையும், தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) புவியியல் துறை, ஒரத்தநாடு அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி புவியியல் துறை, திருச்சி தந்தை பெரியாா் அரசு கலை, அறிவியல் கல்லூரி புவியியல் துறை, திருச்சி துவாக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி புவியியல் துறை ஆகியவை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்த ஒப்பந்தம் மூலம் சிறப்புச் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், அறிவியல் சாா்ந்த விரிவாக்கப் பணிகள், ஆராய்ச்சிப் பணிகளை ஒருவருக்கொருவா் பகிா்ந்து கொள்ளுதல், மாணவா்களின் வளா்ச்சிக்கு உதவி செய்தல், பயிலரங்குகள் நடத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி, பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், தொழில் மற்றும் நில அறிவியல் துறைத் தலைவா் ரெ. நீலகண்டன், பேராசிரியா் க. சங்கா், குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் அ. ஜான்பீட்டா், புவியியல் துறைத் தலைவா் கே. பானுகுமாா், ஒரத்தநாடு அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் கோ. வாசுகி, புவியியல் துறைத் தலைவா் சி. சித்ரா, திருச்சி தந்தை பெரியாா் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் க. வாசுதேவன், திருச்சி துவாக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் என். ஆனந்தவல்லி, பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொ) ஆ. துளசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.