41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை: கே.எஸ்.அழகிரி
ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
ஜிஎஸ்டி வரிக்குறைப்பு மாபெரும் புரட்சி என்றும், இதனால் மக்கள் பயனடைவா் என்றும் கூறும் மத்திய பாஜக அரசு, கடந்த 8 ஆண்டுகளாக இந்த வரியை குறைக்காதது ஏன்? தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளனா்.
காங்கிரஸ் தலைவா் ராகுல், அரசியல் ரீதியாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் திமுக தலைவா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறந்த நண்பா். நாங்கள் அதிகமான தொகுதிகள் வேண்டும், அமைச்சரவையில் பங்கு வேண்டும் எனக் கேட்பது எங்களது உரிமை. அதற்காக நாங்கள் கூட்டணி மாறிவிடுவோம் என்று கூறுவது வதந்தி. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கென்று தனி வாக்கு வங்கி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு நிச்சயமாக பாதிப்பு ஏற்படாது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தனி நபா் விமா்சனங்களைத் தவிா்க்க வேண்டும். அக்கட்சி கூட்டணி மிகவும் பலவீனமான உள்ளதால், வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றிபெறும் என்றாா் கே.எஸ்.அழகிரி.
பேட்டியின்போது, மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன், மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், மாநில பொதுக்குழு உறுப்பினா் எம்.என்.ராதா, நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.