What to watch on Theatre & OTT: விடாமுயற்சி, Thandel -இந்த வாரம் என்ன பார்க்கலாம...
``ஆண்டுக்கு 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமணம்...'' -எளிமையாக திருமணம் செய்யும் ஜீத் அதானி!
தொழிலதிபர் முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு மும்பையில் நடத்திய திருமணத்தை கண்டு ஒட்டுமொத்த உலகமே வியந்து பார்த்தது. உலக தொழிலதிபர்கள், இசைக்கலைஞர்கள், பாலிவுட் பிரபலங்கள் என அனைவரையும் தனது மகன் திருமணத்திற்கு அழைத்து வந்தார்.
குஜராத்தில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள், கப்பலில் பார்ட்டி என்று திருமணத்திற்கு முன்பு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து திருமணத்தை அம்பானி நடத்தினார்.
இந்நிலையில், முகேஷ் அம்பானிக்கு நிகரான சொத்துக்களை கொண்டிருக்கும் தொழிலதிபர் கெளதம் அதானி தனது இளைய மகன் ஜீத் அதானியின் திருமணத்தை இன்று அகமதாபாத்தில் நடத்துகிறார்.
அதானியும் தனது மகன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன. ஆனால், அதானி அது போன்ற எந்த வித ஆடம்பர செலவும் செய்யவில்லை. மேலும், உலக தலைவர்களையோ அல்லது பாலிவுட் பிரபலங்களையோ திருமணத்திற்கு அழைக்கவில்லை.
ஜெயின் மற்றும் இந்து முறைப்படி திருமண சடங்கு
திருமண சடங்குகள் அகமதாபாத்தில் உள்ள அதானியின் சாந்திகிராம் நகரில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. ஜெயின் மற்றும் இந்து முறைப்படி இச்சடங்குகள் நடந்து வருகிறது. ஜீத் அதானி சூரத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியின் மகள் திவா ஜெய்மின் ஷாவை இன்று திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை வரவேற்க கையினால் நெய்யப்பட்ட பைதனி சேலைகள் அணிந்த 400 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
21மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச திருமணம்
திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கும் பைதனி சேலைகள் வழங்கப்பட இருக்கிறது. இச்சேலைகள் நாசிக்கில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இத்திருமணம் எளிமையாகவும், பாரம்பரியமாகவும் நடைபெறும் என்று அதானி குடும்பத்தினர் தெரிவித்தனர். இன்று பிற்பகல் 2 மணிக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்குகிறது. திருமணத்திற்கு முன்பு மாற்றுத்திறனாளி பெண்கள் 21 பேருக்கு அதானி தரப்பில் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட ஜீத் அதானி ஒவ்வொரு ஆண்டும் 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் திருமணம் செய்து வைக்கப்படும் என்று அறிவித்தார்.
ஜீத் அதானி -திவா
இன்று திருமணம் செய்யப்போகும் ஜீத் அதானி, அதானி ஏர்போர்ட் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார். 2019ம் ஆண்டு ஜீத் அதானி தனது தந்தையின் அதானி நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக தனது பணியை தொடங்கினார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பட்டப்படிப்பை முடித்துள்ள ஜீத் அதானி பைலட்டிற்கும் படித்துள்ளார். ஜீத் அதானியை திருமணம் செய்து கொள்ளப்போகும் திவா பிரபல வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் ஆவார். ஜெய்மின் ஷாவிற்கு சூரத் மற்றும் மும்பையில் வைர வியாபாரம் நடைபெறுகிறது. பெரிய அளவில் வெளியுலகிற்கு வராத திவா சோசியல் மீடியாவிலும் பெரிய அளவில் அறியப்படாத நபராகவே இருக்கிறார்.
தொழிலதிபர் அதானிக்கு பிரதமர் நரேந்திர மோடி நெறுங்கிய நண்பர் ஆவார். அவர் இத்திருமணத்தில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. பெரிய அளவில் உலக தலைவர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களை அழைத்து திருமணத்தை நடத்தி சர்ச்சையில் சிக்கவேண்டாம் என்று கருதி அதானி தனது மகன் திருமணத்தை எளிய முறையில் நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மகனின் திருமணத்தையொட்டி கும்பமேளாவிற்கு சென்ற அதானி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கங்கா ஆர்த்தியில் ஈடுபட்டார். அதோடு கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு இஸ்கான் ஆன்மீக அமைப்புடன் சேர்ந்து உணவு தயாரித்து வழங்கும் பணியையும் அதானி நிறுவனம் எடுத்து செய்தது.