Illegal Immigrants: 2009 முதல் எத்தனை இந்தியர்களை US வெளியேற்றியிருக்கிறது? அமைச...
புதுச்சேரி: ``2026 தேர்தலில் தமிழ்நாட்டிலும் என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும்!'' -முதல்வர் ரங்கசாமி
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முதல்வர் ரங்கசாமி, 2011-ல் தனிக்கட்சி தொங்கி ஆட்சியைப் பிடித்தார். 2016 தேர்தலில் காங்கிரஸிடம் ஆட்சியப் பறிகொடுத்த அவர், 2021-ல் பா.ஜ.க கூட்டணியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். இன்று கட்சியின் 15-வது ஆண்டு விழா என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அதையடுத்து அலுவலகத்தில் இருந்த தன்னுடைய குருவான அப்பா பைத்தியம் சாமிகளின் படத்திற்கு பூஜை செய்தார். தொடர்ந்து பேசிய அவர், ``கடந்த ஆட்சியில் அரசுத் துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அதனால் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அரசுப் பணியிடங்களை நிரப்பி வருகிறோம்.
எம்.எல்.ஏ-க்களிடம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என வேறுபாடு இல்லாமல் மாநில வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறோம். கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதற்கென குழு அமைத்து 11 தொகுதிகளுக்கு தற்போது நிர்வாகிகளை நியமித்திருக்கிறோம்.
மற்ற தொகுதிகளுக்கும் விரைவில் நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறோம். காமராஜர் அவர்களின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும் கருத்தாகக் கொண்டு செயல்படுகிறோம். இனியும் செயல்படுவோம். அப்பா பைத்தியம் சாமிகள் ஆசியால் நல்லாட்சி நடைப்பெற்று வருகிறது. என்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிடும்." என்று தெரிவித்தார்.