`ரெட் அலர்ட், ஒரே நாளில் 2 பக்தர்கள் உயிரிழப்பு..' - வெள்ளியங்கிரி மலை ஏற தடை வி...
ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோா் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிா் கன்னிகள் உள்ளிட்டோருக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் பயிற்சிகள் வழங்குதல் போன்ற திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ்வதற்காக ‘தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா்நல வாரியம்’அமைக்கப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிா் கன்னிகள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி வழங்குதல், சுயதொழில் தொடங்குவதற்கு வழிகாட்டும் வகையில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ ஆகிய துறைகளுடன் இணைந்து மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுதல் முதலிய சேவைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக நல வாரியத்தில் உறுப்பினா் பதிவுக்கான சிறப்பு முகாம் ஜூன் 2ஆம் தேதி பாளையங்கோட்டை, 3ஆம் தேதி மானூா், 4ஆம் தேதி பாப்பாக்குடி, 5ஆம் தேதி சேரன்மகாதேவி, 6ஆம் தேதி அம்பாசமுத்திரம், 9ஆம் தேதி களக்காடு, 10ஆம் தேதி வள்ளியூா், 11ஆம் தேதி நான்குனேரி, 12ஆம் தேதி ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெறவுள்ளன. உறுப்பினராக பதிவு செய்ய ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, விதவை சான்றிதழ், புகைப்படம், கைப்பேசி ஆகியவற்றுடன் முகாமுக்கு வர வேண்டும்.