ஆன்லைன் விளையாட்டு தடை: இந்திய வீரர்களுக்கு ரூ. 200 கோடி இழப்பு! தோனி, கோலி, ரோஹித்துக்கு அதிக பாதிப்பு!
பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதாவால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளனர்.
பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் வகையில், ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்ட மசோதா’-வை கடந்த வாரம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவா் ஒப்புதலுடன் விரைவில் இது சட்டமாக அமலாகவுள்ளது.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரராக இருந்த அத்தகைய இணையவழி விளையாட்டு நிறுவனமான ‘டிரீம் 11’, தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறது.
ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக இருக்கும் ‘மை11சா்க்கிள்’ நிறுவனமும் தனது பொறுப்பிலிருந்து விலகும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது.
இந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளின் போது ஒளிபரப்பப்படும் இந்த நிறுவனங்களின் விளம்பரங்களில் விளையாட்டு வீரர்கள் நடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்திய வீரர்கள் ரூ. 200 கோடி வரை இழக்க நேரிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய வீரர்களான மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் பெரும் தொகைக்கு எம்பிஎல், டிரீம் 11 போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த மசோதாவால் விராட் கோலி ரூ. 10 - 12 கோடி வரையிலும் தோனி மற்றும் ரோஹித் சர்மா ரூ. 6 - 7 கோடி வரையிலும் வருமான இழப்பு ஏற்படும்.
இந்திய இளம் வீரர்கள் பலரும் இதுபோன்ற நிறுவனங்களுடன் ஆண்டுக்கு ரூ. 1 கோடி வரையில் விளம்பர ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளனர்.